

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் வீடில்லாத அல்லது தற்காலிக கூடாரங்களில் வசிக்கும் 2.95 கோடி பேருக்கு, அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தர மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது மிகவும் முக்கியமான முடிவு. நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள 2022-ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி, சமவெளி பகுதியில் வசிப்பவர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு ரூ.1.2 லட்சமும், மலைப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1.3 லட்சமும் அரசு நிதியுதவி வழங்கும்.
இந்தத் திட்டம் 2 கட்டங்களாக நிறைவேற்றப்படும். இதன்படி முதல் மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி வீடுகள் கட்டித் தரப்படும். இதற்காக அரசு ரூ.82 ஆயிரம் கோடியை ஒதுக்கும். இதில் ரூ.65 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்படும். மீதமுள்ள தொகை நபார்டு வங்கி வழங்கும்.