

உத்தரப் பிரதேச தேர்தல் மட்டும் இல்லாவிட்டால் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றிருக்கப்படாது என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும், போராடும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு தங்களின் வேளாண் பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் சரத் பவார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் வருகிறது. இன்னும் சில மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கிறது. எங்களுக்குக் கிடைத்தத் தகவலின்படி, தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்குப் பாஜகவினர் செல்லும் போது அதுவும் குறிப்பாக கிராமப்பகுதிகளில் அவர்களுக்கு சரியான வரவேற்பு இல்லை. இந்தப் பின்னணியில் தான் வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சரத் பவார் கூறினார்.
மேலும், மகாராஷ்டிரா அரசு இந்த புத்தாண்டு வரை கூட நீடிக்காது என மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியது தொடர்பான கேள்விக்கு, "மகாராஷ்டிராவில், ஆளும் கூட்டணி வெற்றிகரமாக முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சி செய்யும். சந்திரகாந்த் பாட்டீல் ஜோதிடர் போல் கணிப்புகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். உண்மை நிலை வேறு.
பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினரை மத்திய அமைப்புகளை ஏவி சோதனை என்ற பெயரில் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எத்தனை ரெய்டு நடத்தினாலும் சரி, என்ன விசாரணை மேற்கொண்டாலும் சரி எதுவும் வெளிவராது. பாஜகவின் அதிகார துஷ்பிரயோகத்தை மக்கள் நன்றாகவே அறிந்துள்ளனர்" என்றார்.