Last Updated : 24 Nov, 2021 06:25 PM

 

Published : 24 Nov 2021 06:25 PM
Last Updated : 24 Nov 2021 06:25 PM

பாலிவுட் நடிகையை ஒப்பிட்டு ராஜஸ்தான் அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

கத்ரீனா கைஃப் கன்னங்களைப் போல் சாலைகள் மென்மையாக உள்ளன என்று ராஜஸ்தான் அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் அமைச்சரவையின் சமீபத்திய விரிவாக்கத்தில் கேபினட் அமைச்சராக பதவியேற்ற பிறகு அமைச்சர் ராஜேந்திர குதா முதல் முறையாக தனது தொகுதிக்கு வந்தார். தொகுதியில் சாலைகள் மோசமாக உள்ளன என மக்கள் அப்போது அவரிடம் புகார் அளித்தனர்.

அமைச்சர் இப்பிரச்சினையை எதிர்கொள்வதற்காக மேடையில் பேசும்போது, தனது தொகுதியின் சாலைகளை பிரபல பாலிவுட் நடிகையின் கன்னங்களோடு ஒப்பிட்டிருக்கிறார். கூட்டத்தில் அமர்ந்திருந்த மக்கள் அமைச்சரின் இந்த சர்ச்சைப் பேச்சை நகைச்சுவையாக பேசுவதாகக் கருதிக்கொண்டு கைதட்டி ஆரவாரமிட்டு சிரித்தனர்.

அதுமட்டுமின்றி அதிகாரிகளிடம் பின்னர் அமைச்சர் பேசும்போது நான் ஏன் இப்படி பேசினேன் என்பதற்கு விளக்கமளித்துள்ளார். அதில், நடிகையும் பாஜக எம்பியுமான ஹேமமாலினிக்கு வயதாகிவிட்டதாகவும், அதற்குப் பதிலாக கத்ரீனா கைப்பின் கன்னங்களை சாலைகளுக்கான தரமாகத் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் கருத்து தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இன்னும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

லாலு கிண்டல்

அரசியல்வாதிகளிடமிருந்து இதுபோன்ற பாலியல் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றும் புதிதல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு, லாலு பிரசாத் யாதவ், ஹேமமாலினி சம்பந்தப்பட்ட இதே கருத்தை தெரிவித்திருந்தார், இக்கருத்துகளையே உ.பி.யில் அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ராஜாராம் பாண்டேவும் கூறியிருந்தார்.

பின்னர், 2019 ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைவர் பி.சி.சர்மா, ''ஹேமமாலினியின் கன்னங்களைப் போல மத்தியப் பிரதேச சாலைகளை காங்கிரஸ் அரசாங்கம் இனி மென்மையாக மாற்றும்'' என்று கூறியபோது விமர்சனங்கள் கிளம்பியது. ஒருபடி மேலே சென்று, ''அந்தச் சாலைகளின் தற்காலிக நிலை பாஜக தலைவர் கைலாஷ் விஜயவர்கியாவின் கன்னங்களைப் போல் இருந்தது'' என்றார் சர்மா.

லாலுவுக்கு ஹேமமாலினி பதில்

இதுதொடர்பாக, ஹேமமாலினியும், கடந்த காலங்களில், அரசியல் பேச்சுக்காக தன்னை இழுப்பதற்காக பதிலளித்துள்ளார் என்பதைப் பற்றியும் அப்போதைய செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.

''நான் ஒரு நிகழ்ச்சிக்காக பாட்னாவிலிருந்து நாளந்தாவுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். சாலைகள் மிகவும் மோசமாக இருந்ததால், நான் அந்த இடத்திற்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. சாலையின் நிலைமை குறித்து நான் அதிருப்தி தெரிவித்தபோது, லாலுஜி சாலைகளை என் கன்னங்களைப் போல சீராக மாற்றுவதாக உறுதியளித்தார். ஏன் என் கன்னங்கள்? அரசியல்வாதிகள் எனது கன்னங்களை சாலைகளைப் பற்றிய குறிப்புகளாகக் கொண்டுவந்தால், என் கன்னங்கள் விரைவில் அந்த குண்டும் குழியுமான சாலைகளை ஒத்திருக்க ஆரம்பிக்கலாம். அந்த வாக்குறுதிகள் மீறப்படும் என்றே நினைக்கிறேன். '' என்று ஹேமமாலினி முன்பு லல்லுவுக்கு பதிலளித்ததைப் பற்றி சுருக்கமாக தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x