

அடுத்து வருடம் துவக்கத்தில் உபி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கு அங்கு ஆளும் சமாஜ்வாதியின் கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
முலாயமின் மகன் அகிலேஷ்சிங் யாதவ் (42) உபியின் முதல்வராக இருக்கிறார். இவரது ஆட்சிக் காலம் அடுத்த ஆண்டு மார்ச்சுடன் முடிவடைய உள்ளது. நாட்டின் பெரிய மாநிலமான இங்கு மொத்தம் 402 தொகுதிகள் உள்ளன.
இதில் 142 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் ஷிவ்பால் சிங் யாதவ் நேற்று வெளியிட்டார். உபியின் பொதுப்பணித்துறை அமைச்சரான ஷிவ்கோபால், முலாயம்சிங்கின் சகோதரர் ஆவார்.
இது குறித்து ஷிவ்பால் சிங் யாதவ் கூறுகையில், '2017 சட்டப்பேரவை தேர்தல் போருக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். சமாஜ்வாதி ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு எங்கள் வேட்பாளர்கள் மக்கள் முன் வாக்குகளுக்காக மண்டியிடுவார்கள். எங்கள் வெற்றி நிச்சயம் எனபதால் சற்று முன்னதாகவே வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.’ எனத் தெரிவித்தார்.
இந்த தொகுதிகளில் கடந்த 2012 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளார்கள் தோல்வி அடைந்தனர். இவர்களுக்கு அடுத்த தேர்தலில் வெற்றி பெற அதிக கால அவகாசம் அளிக்கும் பொருட்டு முன்கூட்டியே வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேட்பாளர்களில் புதியவர்கள் குறைவு என்றாலும் கடந்த தேர்தலில் இரண்டு மற்றும் மூன்றாவது இடம் பெற்றவர்களுக்கு அதிகமான வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
உபியில் சுமார் 19 சதவிகிதம் முஸ்லீம்கள் மக்கள் தொகை உள்ளது. இதனால், அம் மாநில அரசியலில் முஸ்லீம்கள் முக்கியத்துவம் பெறுவது வழக்கம்.
இதனால், சமாஜ்வாதியின் 142 பேரில் அதிகமாக 26 முஸ்லீம்கள், 18 யாதவர் மற்றும் 12 பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். முஸ்லீம்களில் முக்கிய வேட்பாளர்களாக 'பீஸ் பார்ட்டி' எனப்படும் அமைதி கட்சியின் தலைவர் அனிஸுர்ராம், டெல்லியின் ஜாமியா மசூதி ஷாஹி இமாமான அகமது புகாரியின் மருமகனான உமர் அலிகான் ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளன. இதில் வரும் 21 தனித்தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் முலாயம்சிங்.
சமாஜ்வாதியின் வேட்பாளர்கள் வெற்றிக்காக அமெரிக்காவை சேர்ந்த தேர்தல் ஆலோசனை நிறுவனத்துடன் ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. இவர்கள் தம் எம்.எல்.ஏக்கள் மற்றும் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தவர்களை பற்றி அலசி ஆராய்ந்து அளித்த அறிக்கையின் பேரில் வேட்பாளர்களை நிறுத்துகிறது சமாஜ்வாதி கட்சி.
இதற்கு முன் கடந்த மூன்று தேர்தல்களிலும் உபியின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியுமான மாயாவதி இவ்வாறு வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார்.