

எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசி யால் கரோனா வைரஸ் பரவல் கணிசமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் 3-வது கரோனா அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு கள் குறைவு என்று சுகாதார துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இது கரோனா முதல் அலை ஆகும். படிப்படியாக வைரஸ் பரவல் அதிகரித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் உச்சத்தை தொட்டது. அதன்பிறகு படிப்படியாக வைரஸ் தொற்று குறையத் தொடங்கியது.
இதன் பிறகு கடந்த பிப்ரவரி இறுதியில் 2-வது அலை பரவியது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை தொட்டது. அப்போது சில நாட்கள் தினசரி தொற்று 4 லட்சத்தை தாண்டியது. இதன்படி பிறகு வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.
இதுகுறித்து அசோகா பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியர் கவுதம் மேனன் கூறியதாவது:
துர்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக கரோனா தொற்று அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்பட்டது. ஆனால் 3 வாரங்களை தாண்டியும் வைரஸ் தொற்று கணிசமாக குறைந்து வருகிறது.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 30 சதவீத மக்கள் இரு தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். மக்களுக்கு கரோனா தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கிறது. இதுவைரஸ் பரவலை கட்டுப்படுத்து கிறது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருக்கிறது. இதுவும் வைரஸ் பரவலை தடுக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் சிஎஸ்ஐஆர் அமைப்பின் உயிரியல் துறை தலைவர் அனுராக் அகர்வால் கூறும்போது, "கரோனா 2-வது அலையின்போது ஏராளமானோர் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டனர். நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருக்கிறது. மேலும் பெரும்பான்மை மக்களுக்கு ஒரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா 3-வது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஒருவேளை மூன்றாவது அலை ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்பு இருக்காது" என்றார்.
புனேவில் செயல்படும் மத்திய அரசின் ஐஐஎஸ்இஆர் அமைப்பின் எதிர்ப்பு சக்தி ஆராய்ச்சியாளர் வினிதா கூறும்போது, "நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவது நல்லஅறிகுறியாகும். எனினும் வடகிழக்கில் மிசோரம் மாநிலத்தில் மட்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதில் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.