

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் பற்றி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஆய்வுக் குழு உறுப்பினர் கடிதம் எழுதி உள்ளார்.
மத்திய அரசு 3 புதிய வேளாண்சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த வாரம் அறிவித்தார். வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் சார்பில் ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஷேத்காரி சங்கடனா என்ற விவசாய அமைப்பின் தலைவர் அனில் கன்வட் மற்றும் வேளாண் பொருளாதார நிபுணர்கள் அசோக் குலாட்டி, பிரமோத் குமார் ஜோஷி ஆகியோர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
இக்குழுவினர் வேளாண் சட்டங்களை ஆய்வு செய்தும் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தியும் கடந்த மார்ச் மாதம்உச்ச நீதிமன்றத்தில் தங்களதுஅறிக்கையை சமர்ப்பித்தனர். ஆனால், அந்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. இப்போது, புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையிலும், விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேளாண் சட்டங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை நீதிமன்றம் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு ஆய்வுக் குழு உறுப்பினர் அனில் கன்வட் கடிதம் எழுதியுள்ளார்.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு தீர்வு காணவும் பொதுமக்களின் நலன் கருதியும் ஆய்வுக் குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் வழிவகுக்கும் என்பதால் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கன்வட் தனது கடிதத்தில் கோரியுள்ளார். தவறாக வழிநடத்தப்பட்ட விவசாயிகளின் தேவையற்ற அச்சத்தைப் போக்க அறிக்கை உதவும் என்றும் கடிதத்தில் கன்வட் கூறியுள்ளார்.