Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

அன்பையும் நல்லிணக்கத்தையும் பரப்புவதற்காக ம.பி.யில் தாஜ்மகால் தோற்றத்தில் வீடு கட்டிய நபர்: சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரல்

மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் தாஜ்மகால் தோற்றத்தில் கட்டப்பட்டுள்ள வீடு.

புர்கான்பூர்

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை போன்றே மத்திய பிரதேசத்தில் வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த் பிரகாஷ் சவுக்சே. கல்விநிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். தனது கல்வி நிலையம் அமைந்துள்ள வளாகத்திலேயே 3 வருடங்களுக்கு முன்பு ஆனந்த் பிரகாஷ் வீடு ஒன்றை கட்ட தொடங்கினார். அஸ்திவாரம் போடப்பட்டுதூண்கள் எழுப்பப்பட்டபோது, சாதாரண வீடு போன்ற தோற்றத்தில் காட்சியளித்ததால் இது யார் கவனத்தையும் ஈர்க்க வில்லை.

பின்னர், கட்டுமானப் பணிகள்செல்ல செல்ல தாஜ்மகாலின் தோற்றத்தில் வீடு எழுப்பப்படுவதை அப்பகுதியினர் அறிந்தனர். அன்றுமுதலாகவே இந்த வீடு புர்கான்பூரில் பிரபலம் அடைய தொடங்கியது. இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு வெள்ளை நிற பெயிண்ட் அடித்திருப்பதால் ஒரு சிறிய தாஜ்மகாலாகவே ஆனந்த் பிரகாஷின் வீடு காட்சியளிக்கிறது.

இதையடுத்து, புர்கான்பூர் மட்டுமின்றி மாநிலத்தின் பிற பகுதிகளையும் சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த வீட்டை பார்த்துச் செல்கின்றனர். இந்த வீட்டின் புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் நாடு முழுவதும் இதன் புகழ் பரவியுள்ளது.

இதுகுறித்து ஆனந்த் பிரகாஷ் கூறும்போது, “தனது மனைவி மும்தாஜ் மகாலின் நினைவாகவே ஷாஜகான் தாஜ்மகாலை கட்டினார். தாஜ்மகாலால் ஆக்ரா உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. ஆனால், தாஜ்மகால் அமைய காரணமான மும்தாஜ் மகாலின் சொந்த ஊர் புர்கான்பூர் என்பது யாருக்கும் தெரியவில்லை. எனவே, புர்கான்பூரின் புகழை பரப்பும் நோக்கில்இந்த வீட்டை கட்டினேன். அதுமட்டுமின்றி, இங்கு ஒற்றுமையுடன் வசிக்கும் இந்து – முஸ்லிம் மதத்தினரின் சகோதரத்துவத்தை பறைசாற்றுவதற்காகவும், சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் பரப்பும் நோக்கிலும் இந்ததாஜ்மகால் வீட்டை நிறுவியிருக்கிறேன். 8 ஆயிரம் சதுர அடியில் 4 படுக்கை அறை, தியான அறையுடன் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x