

தேச துரோக வழக்கில் கைதான ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித் மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யாவுக்கு டெல்லி நீதிமன்றம் 6 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடத்தியபோது, இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கம் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகியோர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் கண்ணய்யா குமாருக்கு ஏற்கெனவே இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) உமர் காலித் மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யா தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதி ரிதேஷ் சிங், இருவருக்கும் 6 மாதம் வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் விசாரணை காலம் முடியும் வரை நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தார்.