

முன்னாள் கிரிக்கெட் பிரபலம் கீர்த்தி ஆசாத், அவர் காங்கிரஸிலிருந்து திரிணமூல் காங்கிரஸில் இணையப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிஹார் முன்னாள் முதல்வர் பகவத் ஜா ஆசாத்தின் மகனான கீர்த்தி ஆசாத், அரசியலில் சேருவதற்கு முன்பு, ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தார், அவர் கபில் தேவ் தலைமையிலான 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் பேட்ஸ்மேனாக இருந்தார்.
கீர்த்தி ஆசாத் மற்றும் 1980 மற்றும் 1986 க்கு இடையில் இந்தியாவுக்காக 7 டெஸ்ட் மற்றும் 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர். ஆக்ரோஷமான வலது கை பேட்ஸ்மேன் மற்றும் வேகமான ஆஃப்ஸ் பின்னர் என்றும் கொண்டாடப்படுபவர்.
முன்னர் பாஜகவிலும் பின்னர் காங்கிரஸிலும் இணைந்த கீர்த்தி ஆசாத் தற்போது, நான்கு நாள் பயணமாக டெல்லிக்கு வந்துள்ள மம்தா பானர்ஜி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய ஆசாத், தான் திரிணமூலில் இணையப் போவதாக வந்த செய்திகளை நான் மறுப்பதற்கில்லை, என்று தெரிவித்தார்.
ஆசாத் தவிர, 2019 அக்டோபரில் காங்கிரஸில் இருந்து விலகி, சொந்தக் கட்சியைத் தொடங்கிய அசோக் தன்வார் மற்றும் முன்னாள் ஜனதா தள பொதுச் செயலாளர் பவன் வர்மா ஆகியோரும் திரிணமூல் காங்கிரஸில் சேர வாய்ப்புள்ளது.