வைரலான மோடி, யோகி புகைப்படம்: ஒரே ஒரு வித்தியாசத்தை சுட்டிக் காட்டி காங்கிரஸ் கிண்டல்

வைரலான மோடி, யோகி புகைப்படம்: ஒரே ஒரு வித்தியாசத்தை சுட்டிக் காட்டி காங்கிரஸ் கிண்டல்
Updated on
2 min read

அண்மையில் உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் 3 நாள் நடைபெற்ற அனைத்து யூனியன் பிரதேசம், மாநில போலீஸ் டிஜிபிக்களின் மாநாடு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டார்.

அப்போது தானும் பிரதமரும் எடுத்துக் கொண்ட இரு புகைப்படங்களைப் பகிர்ந்த யோகி ஆதித்யநாத், "நமது உடலையும் ஆன்மாவையும் அர்ப்பணித்து, சூரியனை உதிக்கச் செய்வோம். வானத்தை விட உயர வேண்டும், புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியுடன் நாம் புறப்பட்டுள்ளோம்" என்று பதிவிட்டிருந்தார்.

மோடி, யோகி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. உத்தரப் பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தலை விரைவில் சந்திக்கவுள்ள நிலையில், இந்தப் புகைப்படமும் தேர்தலுக்கான பிரச்சார உத்தியாகவே பார்க்கப்பட்டது.

ஆனால், இந்தப் புகைப்படத்தில் ஒரு வித்தியாசம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ், தேர்தலுக்காக இப்படி ஒரு ஃபோட்டோ ஷூட் தேவையா என்று கிண்டல் செய்து வருகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநடே, தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரே ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, நமது மாநில முதல்வர் யோகி, எல்லாம் சரியாக இருக்கிறது என்று கூற முயற்சிக்கிறார். ஆனால், இந்தப் புகைப்படத்தை உற்றுப் பாருங்கள். இதில் ஒரு படத்தில் பிரதமர் மோடி அங்கவஸ்திரம் போட்டுள்ளார். இன்னொரு புகைப்படத்தில் அவர் ஷால்வை அணிந்திருக்கிறார். இதனால், தலைமையிலேயே பதற்றமும், கவலையும் இருப்பதை உணர முடிகிறது. யோகி, நீங்கள் இந்தப் புகைப்படத்தால் ஆதாயம் அடைவதைக் காட்டிலும் சர்ச்சையையே ஏற்படுத்தி உள்ளீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல் இளைஞர் காங்கிரஸ் தலைவரான பிவி ஸ்ரீநிவாஸ் இப்புகைப்படத்தைப் பகிர்ந்து, இரண்டு படங்களில் உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கவும் என கிண்டல் செய்துள்ளார்.

இதே போல், இணையவாசிகள் பலரும் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழத்தில், திமுக ஐடி பிரிவு மாநில துணைச் செயலர் இசை, இந்தப் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து, கதவை நோக்கி செல்லும்போது ஷால்வை இல்லை, பின்னர் டச் அப் செய்து, ஷால்வை போட்டுக் கொண்டு திரும்ப வருகிறார். ஆனால் இரண்டிலுமே ஆடை ஒன்றாகவே இருக்கிறது. அப்படியென்றால் இது பிரதமர் இல்லையோ என்று ட்வீட் செய்துள்ளார்.

ஏற்கெனவே வைரலான மோடி, யோகி புகைப்படம், இப்போது காங்கிரஸ், அதன் கூட்டணி கட்சியினரால் ஷால்வை, அங்கவஸ்திரம் வித்தியாசத்தை சுட்டிக் காட்டி மீண்டும் வைரலாக்கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in