Published : 22 Nov 2021 07:38 PM
Last Updated : 22 Nov 2021 07:38 PM

கோவிட் தடுப்பூசி; தொண்டு நிறுவனங்கள், ஆன்மீக அமைப்புகளை ஈடுபடுத்துங்கள்: மாண்டவியா

கோவிட் தடுப்பூசி முழுமை அடைவதற்குத் தொண்டு நிறுவனங்கள், ஆன்மீக அமைப்புகள், சமயத் தலைவர்கள், சமூக செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை ஈடுபடுத்த மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.

மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு இன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் சுகாதாரத் துறை செயலாளர்கள் மூத்த அதிகாரிகள் ஆகியோருடன் காணொலிக் காட்சி மூலம் அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவில் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தியவர்கள் 82 சதவீதமும், இரண்டாவது டோஸ் செலுத்தியவர்கள் 43 சதவீதமும் உள்ள நிலையில், மணிப்பூரில் 54%, 36%, மேகாலயாவில் 57%, 38%, நாகாலாந்தில் 49%, 36%, புதுச்சேரியில் 66%, 39% என்ற நிலையில் உள்ளது.

கோவிட் 19 தடுப்பூசி செலுத்துவதில் இறுதிக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். தடுப்பூசி வேகத்தை அதிகரித்தல் மற்றும் தடுப்பூசி செலுத்துவதை விரிவுபடுத்துதல் மூலம் கோவிட் 19 தடுப்பூசி முழுமை பெறுவதை உறுதி செய்ய தீவிரமான இயக்கத்தை நாம் தொடங்குவோம்.

கோவிட் 19-க்கு எதிரான சக்தி வாய்ந்த ஆயுதம் தடுப்பூசி என்பதை வலியுறுத்திய சுகாதார அமைச்சர், கோவிட் தடுப்பூசி முழுமை அடைவதற்குத் தொண்டு நிறுவனங்கள், ஆன்மீக அமைப்புகள், சமயத் தலைவர்கள், சமூக செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை ஈடுபடுத்த மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதுகாப்புக் கவசம் எனப்படும் கோவிட் 19 தடுப்பூசி செலுத்தாமல், நாட்டில் தகுதிவாய்ந்த குடிமக்கள் ஒருவரும் விடுபடவில்லை என்பதைக் கூட்டு முயற்சியோடு நாம் உறுதி செய்ய வேண்டும். தயக்கம், தவறான தகவல், மூட நம்பிக்கை போன்ற பிரச்சினைகளையும் நாம் சரி செய்ய வேண்டும்.

அரசு ஊழியர்கள் அனைவரையும், வாரத்தில் ஒருநாள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்தவும், திரட்டவும் ஈடுபடுத்த மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

அருணாச்சலப்பிரதேசத்திற்கு அண்மையில் நான் பயணம் செய்த போது, பல வீடுகளில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட வீடு என்று ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பதை கவனித்தேன்.

இதுபோன்ற உத்திகளை மற்ற மாநிலங்களும் பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், கூடுதல் செயலாளர் டாக்டர் மனோகர் அக்னானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x