

ஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் என்ற சர்ச்சைக்குரிய மசோதாவை கைவிடுவதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்திற்கு விசாகப்பட்டினம், அமராவதி, கர்னூல் என்று மூன்று தலைநகரங்களை அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு மாநிலம் முழுவதும் கடுமையான எதிர்ப்பலைகள் எழும்பின.
இந்நிலையில் இந்த சட்ட மசோதா திரும்பப்ப்பெறப்படுவதாக ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பேசிய அவர், "தலைநகரை மூன்றாகப் பிரிப்பது என்பது ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நாங்கள் கருதினோம். ஆனால், அதை இப்போதைக்கு திரும்பப் பெறுகிறோம். இத்திட்டத்தில் எந்த ஒரு சிறு இடையூறும் இல்லாத வண்ணம் செதுக்கி பின்னொரு காலத்தில் மீண்டும் தாக்கல் செய்வோம்" என்றார்.
முன்னதாக மூன்று தலைநகரங்கள் அறிவிப்பை எதிர்த்து, விவசாயிகள் கடந்த நவம்பர் 1 ஆம் தேதியன்று 45 நாட்கள் பாதயாத்திரையைத் தொடங்கினர். இந்த யாத்திரை அமராவதியிலிருந்து திருப்பதி வரை நடத்துவதாக இருந்தது. கடந்த ஞாயிரன்று இது நெல்லூரை அடைந்தது. மாநிலம் முழுவதும் விவசாயிகள் இந்த சட்ட மசோதாவைக் கடுமையாக எதிர்த்தனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் என்ற சர்ச்சைக்குரிய மசோதாவை கைவிடுவதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.