

ஜீரோ பேலன்ஸ் கணக்கைப் பராமரிக்கும் ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட ஜன்தன் வங்கிக் கணக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக, ஊடகத்தின் செய்தியைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பை ஐஐடி ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டதில், ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட ஜன்தன் வங்கிக் கணக்கில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் பரிமாற்றக் கட்டணமாக ரூ.164 கோடி எடுத்துள்ளது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி எனத் தெரிவித்துள்ளது.
ஐஐடி மும்பை வெளியிட்ட அறிக்கையில், “ஸ்டேட் வங்கி ஜன்தன் வங்கிக் கணக்குதாரர்களிடம் கடந்த 2017 முதல் 2019-ம் ஆண்டுவரை 4 டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கு மேல் செய்தால், ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ.17.70 கட்டணம் விதித்துள்ளது. இதன் மூலம் ரூ.254 கோடி ஈட்டியுள்ளது.
சாமானிய மக்களுக்கும் வங்கிக் கணக்கு வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடியால் ஜன்தன் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. அதனால்தான் குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை என்ற வசதியும், ரூபே டெபிட் கார்டு வசதியும் தரப்பட்டது. ஆனால், 4 டிஜிட்டல் பரிமாற்றங்களுக்குப் பின் கட்டணம் வசூலித்துள்ளது வங்கி நிர்வாகம்.
அதாவது ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் முதலில் 4 டிஜிட்டல் பரமாற்றத்துக்குக் கட்டணம் இல்லை. ஆனால், அதன்பின் 15 ரூபாய்க்கு ஏதேனும் பொருள் வாங்கி டிஜிட்டல் பரிமாற்றத்தில் அல்லது யுபிஐ மூலம் பணம் செலுத்தினால் 5-வது பரிமாற்றத்திலிருந்து ஒவ்வொரு முறையும் ரூ.17.70 வசூலிக்கப்படும். ஜன்தன் வங்கிக் கணக்கிற்கு கட்டணம் வசூலித்து வங்கி விதிமுறையை மீறியுள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிகளையும் மீறியதாக ஐஐடி தெரிவித்துள்ளது.
2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு செப்டம்பர் வரை ரூ.254 கோடியை ஜன்தன் வங்கிக் கணக்குதாரர்களிடம் கூடுதல் பரிமாற்றத்துக்காக ஸ்டேட் வங்கி வசூலித்துள்ளது. இந்தப் பணத்தைத் திருப்பித் தர மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை ரூ.90 கோடி மட்டுமே ஸ்டேட் வங்கி, வங்கிக் கணக்குதாரர்களிடம் திருப்பி அளித்துள்ளது. அதில் ரூ.164 கோடி திரும்ப வழங்கப்படவில்லை.
மும்பை ஐஐடி புள்ளியியல் பேராசிரியர் ஆஷிஸ் தாஸ் இந்த ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டார். இன்னும் 164 கோடி ரூபாய் ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் சேர்க்காமல் ஸ்டேட் வங்கி செயல்படுகிறது.
இந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தக் கணக்கில் உள்ள பணத்தை வைத்திருப்பவர்களுக்கு யார் பொறுப்பு” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.