

சமூக ஊடகங்களான டிவிட்டரில் வெறுப்புச் செய்திகள், போலிச் செய்திகள், தேசத்துரோக வாசகங்கள் பரப்புவதைத் தடை செய்ய வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
பாஜக தகவல்தொழில்நுட்ப பிரிவின் முன்னாள் தலைவர் வினித் கோயங்கா, வழக்கறிஞர்கள், வினித் ஜின்டால், அஷ்வினி குமார் உபாத்யாயே உள்ளிட்ட பலர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏஎம். கான்வில்கர், சிடி ரவிக்குமார் தலைமையிலான அமர்வில் இன்று விசாரிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
வினித் கோயங்கா தனது மனுவில், “ ட்வி்ட்டர் தளத்தில் பணம் செலுத்தி, சிலரின் கணக்குகள் மூலம் வெறுப்புணர்வைத் தூண்டும் செய்திகள், தேசத்துக்கு எதிரான கருத்துக்கள், கோபத்தை உண்டாக்கும் செய்திகள், போலிச்ச செய்திகள் வருகின்றன. இவற்றை தடுக்க கட்டுப்பாடுகளும், விளம்பரம் பெறுவதிலும் கட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டும்.
தீவிரவாத குழுக்கள் மீது இரக்க உணர்வுடன் ட்விட்டர் நிர்வாகம் இருக்கிறது. இதனால் தேசத்துக்கு எதிரான வாசகங்கள் கருத்துகள் எளிதாக வருகின்றன. டெல்லியில் நடந்த பெரும் கலவரத்துக்கு முக்கியக் காரணமாக இருந்துத போலிச் செய்தியும், போலி ட்விட்டர் செய்தியும்தான். சாதியைப் பரப்புதல், வகுப்புவாதம், மதவாதம், மொழிவாதம், இனவாதம் ஆகியவற்றை அதிகப்படுத்தவே போலி ட்விட்டர் கணக்கை பயன்படுத்துகிறார்கள். இது தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, சகோதரத்துவத்துக்கு ஆபத்தானது” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற விவகாரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் கோயங்கா தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்குஉச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அந்த மனுவின் விசாரணையும் நிலுவையில் இருக்கிறது.
250க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் மூலம் போலிச்செய்திகள், மக்களிடையே ஆத்திரத்தையும், கோபத்தை தூண்டும் கருத்துக்கள் வெளிவந்ததால் அவற்றை தடை செய்ய ட்விட்டர் நிர்வாகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், அதற்கு ட்விட்டர் நிர்வாகம் மறுத்துவிட்டது.
வினித் ஜின்டால் தாக்கல் செய்தமனுவில், “ சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம் ஆகியவற்றில் வெறுப்புணர்வு பேச்சு, போலிச் செய்திகள் வராமல் தடுக்க விதிகளை வகுத்து ஒழுங்குபடுத்தவேண்டும். போலிச் செய்திகளைப்ப ரப்புவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.