

ராஜஸ்தான் அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டதை அடுத்து, 11 கேபினட் அமைச்சர்கள் உட்பட 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
200 சட்டப்பேரவைத் தொகுதி களைக் கொண்ட ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அமைச்சரவையின் பலம் 30-ஆக இருந்த சூழலில், முதல்வர் உட்பட 21 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர்.
இந்த சூழலில், எம்எல்ஏக்.கள் பலர், தங்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதேபோல, காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவர் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களுக்கும் அமைச்சரவையில் இடம் தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, நேற்று முன்தினம் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, 11 கேபினட் அமைச்சர்கள், 4 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றனர். இதன் மூலம்தற்போது 19 கேபினட் அமைச்சர்கள், 10 இணையமைச்சர்கள் என மாநில அமைச்சரவையின் பலம் 30-ஆக அதிகரித்துள்ளது.
- பிடிஐ