

உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் மத்திய சிறு பான்மையினர் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
விவசாயிகளின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்திலேயே, வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு இது.
இந்த நடவடிக்கையை மேற் கோள்காட்டி குடியுரிமை திருத்தச் சட்டம், 370-வது சட்டப் பிரிவு நீக்கம் ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரும் அரசியல் நாடகங்களை சிலர் தொடங்கியுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான சட்டம்அல்ல. மாறாக, அண்டைநாடுகளில் மத சிறுபான்மையினராக இருக்கும் மக்களுக்கு குடியுரிமையை வழங்கும் சட்டம் ஆகும்.
இந்த சட்டத்தை எதிர்ப் பவர்களுக்கும் இது நன்றாக தெரியும். எனினும், அரசியல் ஆதாயத்திற்காக அவர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுக்கின்றனர்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு தான், அந்த பிராந்தியத்தை சேர்ந்த மக்கள் நமது தேசிய நீரோட்டத்தில் கலந்துள்ளனர். நாட்டின் அரசியல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் அவர்களும் பங்குபெறத் தொடங்கியுள்ளனர். எனவே, குடியுரிமை திருத்தச் சட்டம், 370-வது சட்டப்பிரிவு நீக்கத்தை திரும்பப் பெறக் கோருவது நியாயமற்றது.
இவ்வாறு முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.