Published : 22 Nov 2021 03:06 AM
Last Updated : 22 Nov 2021 03:06 AM

அதிநவீன கருவிகளுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விசாகப்பட்டினம் போர்க்கப்பல் கடற்படையில் சேர்ப்பு: சீனா மீது மறைமுகமாக குற்றம் சாட்டிய அமைச்சர் ராஜ்நாத் சிங்

மும்பை

‘‘ஐ.நா.வின் கடல் சட்டதிட்டங்களை மீறி சில நாடுகள் பொறுப்பற்ற முறையில் செயல்படுகின்றன’’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சீனாவை மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.

மத்திய பாதுகாப்புத் துறை 15பி என்ற பெயரில் 4 அதி நவீன போர்க் கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வரு கிறது. அதன்படி, முதல் அதிநவீன போர்க் கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் மும்பை கப்பல்கட்டுமான தளத்தில் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டது. அதன்பின், பல்வேறு கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன.

இதையடுத்து 7,400 டன் எடையுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விசாகப்பட்டி னம் போர்க் கப்பல் நேற்று கப்பற்படையில் இணைக்கப் பட்டது. அதற்கான விழா மும்பை யில் நேற்று நடைபெற்றது.

போர்க் கப்பலை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப் பணித்தார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:

கடல் வழி பயன்பாடு, பாதுகாப்பு, வர்த்தக போக்குவரத்து தொடர்பாக ஐ.நா. சர்வதேச சட்ட திட்டங்களை வகுத்துள்ளது. அவற்றை சர்வதேச நாடுகள் பின்பற்றி வருகின்றன. அதே நேரத்தில், ஐ.நா. கடல் சட்ட திட்டங்களுக்கு தவறான விளக் கங்கள் கூறியும் குறுகிய மனப் பான்மையுடனும் சில நாடுகள் (சீனா) செயல்படுகின்றன. இதனால் ஐ.நா. கடல் சட்டங்கள் வலிமை இழக்க முயற்சிகள் நடக்கின்றன.

சில நாடுகள் சில கடல் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றன. அந்தப் பிரச் சினைக்கு அனைத்து நாடுகளும் தீர்வு காண வேண்டும். பாது காப்பான சர்வதேச கடல் சட்டங் களை நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

தென் சீனக் கடல் பகுதியில் சர்வதேச நாடுகளின் கப்பல் போக்குவரத்து அதிகமாக உள்ளது. மேலும், இந்தக் கடல் பகுதியில் எரிவாயு, எண்ணெய் வளங்கள் அதிகமாக உள்ளன. இந்நிலையில், தென் சீன கடலை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அத்துடன், பல்வேறு சிறுசிறு கட்டுமானங்களையும் சீனா செய்து வருகிறது.

இதற்கு அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மலேசியா, வியட் நாம், பிலிப்பைன்ஸ், தைவான் போன்ற நாடுகளும் தென் சீனக் கடல் பகுதிக்கு சொந்தம் கொண்டாடுகின்றன.

இந்த சூழ்நிலையில் தான் ‘சில நாடுகள் பொறுப்பற்று செயல் படுகின்றன’ என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் மறைமுகமாகப் பேசியுள்ளார்.

தற்போது கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க் கப்பலில் ஏராளமான ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கும்ராக்கெட்டுகள், ரேடார்கள், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் உட்பட போர் சூழ்நிலையின் போது தேவைப்படும் அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், சூப்பர்சானிக் சென்சார் கள் வசதியும் உள்ளது. அதிநவீன துப்பாக்கிகள், மின்னணுபோர்க் கருவிகள் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்தப்போர்க்கப்பலில் இடம்பெற்றுஉள்ளன.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x