

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் ராணுவப் பகுதியில் துணை ராணுவத்தினர் உடையில் சந்தேகத்துக்கு இடமான வகை யில் சுற்றித் திரிந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்துக்குள் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் காரணமாக விமானப்படை தளம் அமைந்துள்ள சுற்றுவட்டார பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பதான்கோட்டில் உள்ள டேங்க் சவுக் என்ற ராணுவப் பகுதிக்குள் துணை ராணுவப்படையின் உடை அணிந்து பெண் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் அந்த பெண்ணை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவரது பெயர் ரமீந்தர் கவுர் என தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்து எல்லை பாதுகாப்பு படை மற்றும் பஞ்சாப் மாநில போலீஸாரின் லோகோக்கள் அடங்கிய உடைகளையும் பறிமுதல் செய்து, ராணுவ உடையை தவறாக பயன்படுத்தியதாக போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர். 45 வயது மதிக்கத்தக்க அந்த பெண், தனக்கு 25 வயது தான் ஆகிறது என விசாரணையில் தெரிவித்திருப்பதால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இதனால் அவருக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.