

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்தாலும், 2020-ம் ஆண்டு உ.பி. தேர்தலுக்குப் பின் பாஜக அரசு மீண்டும் சட்டங்களைக் கொண்டுவரக்கூடும் என சமாஜ்வாதி கட்சி அச்சம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதைத் திரும்பப் பெறக்கோரி கடந்த ஓராண்டாகப் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தின் விளைவாக, இந்த வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமர் மோடி கடந்த இரு நாட்களுக்கு முன் மக்களுக்கு அறிவித்தார்.
இந்நிலையில், தேவைப்பட்டால் எதிர்காலத்தில் இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று உத்தரப் பிரதேச ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, பாஜக எம்.பி. ஷாக்ஸி மகராஜ் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், விவசாயிகள் தரப்பிலோ வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்தச் சட்டங்களை முறையாக மத்திய அரசு திரும்பப் பெறும்வரை, குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம் கிடைக்கும் வரை, மின்சாரத் திருத்தச் சட்டம் திரும்பப் பெறும்வரை போராட்டத்தைக் கைவிடமாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அளித்த பேட்டியில், “வேளாண் சட்டங்களில் உள்ள ஷரத்துகளை விவசாயிகளுக்குப் புரியவைக்க முயற்சிகள் நடந்தன. சாதகங்களைக் கூறினோம். ஆனால், விவசாயிகள் சட்டங்களைத் திரும்பப் பெறக் கூறினார்கள். சட்டங்களுக்கு எதிராகப் போராடினார்கள். இப்போதுள்ள சூழலில் சட்டங்களைத் திரும்பப் பெற அரசு முடிவு செய்தது. தேவைப்பட்டால் எதிர்காலத்தில் சட்டம் கொண்டுவரப்படும்” எனத் தெரிவித்தார்.
உன்னவ் தொகுதி பாஜக எம்.பி. ஷாக்ஸி மகராஜ் அளித்த பேட்டியில், “மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம், திரும்பப் பெறப்படலாம். மீண்டும் கூட உருவாக்கப்படும், கொண்டுவரப்படும். ஆனால், பெரிய மனதுடன் சட்டங்களை வாபஸ் பெற்ற பிரதமர் மோடிக்கு நன்றி. உ.பி. தேர்தலுக்கும் சட்டங்களை வாபஸ் பெற்றதற்கும் தொடர்பில்லை. உ.பி. தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் பாஜக வெல்லும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பாஜகவினர் இதயம், மனது சுத்தமாக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. உ.பி. தேர்தல் முடிந்தபின், மீண்டும் வேளாண் மசோதாக்கள் கொண்டுவரப்படும். அரசியலமைப்புச் சட்டப் பதவியில் இருக்கும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, பாஜக எம்.பி. ஷாக்ஸி மகராஜ் ஆகியோர் வேளாண் சட்டங்கள் தேவைப்பட்டால் மீண்டும் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளார்கள். விவசாயிகளிடம் பொய்யான வாக்குறுதி அளித்ததன் உண்மை நிலை, 2022-ம் ஆண்டில் விவசாயிகள் மாற்றத்தைக் கொண்டுவருவார்கள்” எனத் தெரிவித்தார்.