Published : 21 Nov 2021 01:00 PM
Last Updated : 21 Nov 2021 01:00 PM

வேளாண் சட்டங்கள், சிஏஏ, பண மதிப்பிழப்பின் நன்மைகளை பிரதமரால் விளக்க முடியவில்லை; மக்கள் புரிந்துகொண்டார்கள்: காங்கிரஸ் தாக்கு

பிரதமர் மோடி | கோப்புப்படம்

புதுடெல்லி 

வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், பண மதிப்பிழப்பு ஆகியவற்றின் நன்மைகளை பிரதமர் மோடியால் விளக்க முடியாவிட்டாலும் மக்கள் புரிந்துகொண்டார்கள் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஓராண்டாக விவசாயிகள் கடும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் வீரியம் அடைந்து வருவதையடுத்து, 3 சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த இரு நாட்களுக்கு முன் அறிவித்தார். அப்போது மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளிடம் தெரிவித்து அவர்களை சமாதானம் செய்ய முடியவில்லை என்றும் மக்களிடமும் மன்னிப்பு கோரினார்.

இதைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பிரதமர் மோடியால் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் நன்மைகளையும் விளக்க முடியவில்லை. பண மதிப்பிழப்பின் நன்மைகளையும் பொருளாதார வல்லுநர்களுக்கும், மக்களுக்கும் விளக்க முடியவில்லை.

ஜிஎஸ்டி சட்டத்தின் நன்மைகளையும் வர்த்தகர்களிடமும், கடைக்காரர்களிடமும் விளக்க முடியவில்லை. சிறுபான்மையினரிடம் சிஏஏ சட்டத்தின் நன்மைகளை விளக்க முடியவில்லை. பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி குறித்து தேசத்தின் நடுத்தர விவசாயிகள், மக்களிடமும் பிரதமரால் விளக்க முடியவில்லை.

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1000 எட்டியதால் ஏற்பட்ட நன்மைகளையும் குடும்பப் பெண்களிடம் மோடியால் விளக்க முடியவில்லை. மேக் இன் இந்தியா திட்டத்தின் நன்மைகளையும், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களிடம் விளக்க முடியவில்லை.

கறுப்பு வேளாண் சட்டங்களின் நன்மைகளையும் விவசாயிகளிடம் விளக்க முடியவில்லை. ஆனால், இந்த தேசம் ஒவ்வொன்றையும் புரிந்துகொண்டது. சூட்-பூட் சர்க்கார் புரிந்து கொள்ளவில்லை'' என்று ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x