

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாட்கள் பயணமாக நாளை டெல்லி செல்கிறார். வரும் 25-ம் தேதி வரை அங்கு இருக்கும் அவர் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்துப் பேசவுள்ளார்.
மம்தா பானர்ஜியின் இந்தப் பயணத்தின்போது, டெல்லியில் அவரைச் சந்திக்க பாஜக எம்.பி. வருண் காந்தி திட்டமிட்டுள்ளார் என்றும், அதன்பின் திரிணமூல் காங்கிரஸில் இணையவும் முடிவு செய்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அதற்கு முன்பாகவே மம்தா பானர்ஜி டெல்லி பயணத்துக்குத் திட்டமிட்டுள்ளார்.
மே.வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றபின் கடந்த ஜூலை மாதம் மம்தா பானர்ஜி டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டார். அதன்பின் இப்போது 2-வது முறையாகச் செல்கிறார். கடந்த பயணத்தின்போது பிரதமர் மோடியைச் சந்தித்து மம்தா பானர்ஜி பேசினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், ஆனந்த் சர்மா ஆகியோரைச் சந்தித்து மம்தா பேசினார்.
இந்தப் பயணத்தின் போதும் பிரதமர் மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிஎஸ்எஃப் படைக்கு எல்லை அதிகாரம் மாற்றி அமைக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடியிடம் மம்தா பானர்ஜி பேசுவார் எனத் தெரிகிறது.
கடந்த முறை டெல்லி பயணத்தின்போது முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், “2024-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கும். அப்போது நடக்கும் தேர்தல் மோடிக்கும் இந்த தேசத்துக்குமான தேர்தலாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
மம்தா பானர்ஜி 2-வது முறையாக டெல்லி செல்வது எதிர்க்கட்சிகளை ஒரு அணியில் திரட்டும் பணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். குளிர்காலக் கூட்டத்தொடரில் என்ன மாதிரியான பிரச்சினைகளை முன்வைத்து ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி அளிக்கலாம் என்பது குறித்து டெல்லி பயணத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மம்தா பேசுவார் எனத் தெரிகிறது.
சமீபத்தில் பாஜக தேசிய செயற்குழுவில் இருந்து பாஜகவின் மூத்த தலைவர்கள் மேனகா காந்தி, அவரின் மகன் வருண் காந்தி இருவரும் நீக்கப்பட்டனர். இதனால் இருவரும் அதிருப்தியில் இருப்பதால், முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி பயணத்தின்போது அவர்களைச் சந்தித்து திரிணமூல் காங்கிரஸில் வருண் காந்தி இணையக்கூடும் எனத் தெரிகிறது.