Last Updated : 21 Nov, 2021 11:37 AM

 

Published : 21 Nov 2021 11:37 AM
Last Updated : 21 Nov 2021 11:37 AM

முதலில் உங்கள் பிள்ளைகளை எல்லைக்கு அனுப்புங்கள்: பின்னர் இம்ரானை மூத்த சகோதரர் என அழைக்கலாம்: சித்துவுக்கு கவுதம் கம்பீர் பதிலடி

காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பாஜக எம்.பி. கவுதம் கம்பீர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் | கோப்புப்படம்

புதுடெல்லி


முதலில் உங்கள் பிள்ளைகளை எல்லைக்கு அனுப்புங்கள் அதன்பின் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மூத்த சகோதரர் என்று அழைக்கலாம் என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள குருதுவாரா தர்பார் சாஹிப்புக்கு நேற்று சென்ற பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அங்கு வழிபாடு நடத்தினார். அப்போது கர்தார்பூர் திட்ட மேலாண்மை தலைமைநிர்வாக அதிகாரி முகமது லத்தீப் ஜீரோ பாயின்ட் பகுதியில் சித்துவை பிரதமர் இம்ரான் கான் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தார்.

அப்போது நவ்ஜோத் சிங் சித்து பேசுகையில் “ கர்தார்பூர் குருதுவாரா தர்பார் சாஹிப் இந்தியா, பாகிஸ்தான் இடையே புதிய நட்புறவை திறக்கட்டும். இம்ரான் கான் என்னுடைய மூத்த சகோதரர். அவரின் வரவேற்பு எனக்கு மிகப்பெரிய கவுரவம், என்மீது அதிகமான அன்பு வைத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

சித்துவின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியது, பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாஜக எம்.பி.கவுதம் கம்பீர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ நவ்ஜோத் சிங் சித்து முதலில் தனது பிள்ளைகளை எல்லைக்கு காவலுக்கு அனுப்ப வேண்டும். அவரின் குழந்தைகள் ராணுவத்தில் பணியாற்றுகிறார்களா. அவ்வாறு அனுப்பி வைத்துவிட்டு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மூத்த சகோதரர் என அழைக்கலாம்.

காஷ்மீர் கடந்த ஒரு மாதத்தில் 40 மக்கள், வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து இதுவரை சித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை, ஆனால், இந்தியாவைக் காக்கபோராடுபவர்களுக்கு எதிராக சித்து நிற்கிறார். இதைவிட சித்துவின் செயல் வெட்கக்கேடானது இல்லை.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி பஜ்வாவை கட்டித்தழுவினார் இம்ரான் கானை மூத்த சகோதரர் என அழைக்கிறார் சித்து. அமரிந்தர் சிங் இந்தியாவை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்து அவர் நாட்டைப் பற்றி பேசும்போது, சித்துவின் செயல் மோசமானதைவிட வேறு ஏதுமில்லை.

ஏ.சிய அறையில் அமர்ந்து கொண்டு, அல்லது கர்தார்பூர் சென்று பேசுவது எளிது. ஆனால் எல்லைக்கு பிள்ளைகளை காவலுக்கு அனுப்பி எதிரிநாட்டு ராணுவத்தால், தீவிரவாதிகளால் பிள்ளைகளை பறிகொடுத்த குடும்பத்தினரிடம் கேளுங்கள். யாருக்கு பொறுப்பு இருக்கிறது எந்று அப்போது தெரியும், வெட்கமாக இருக்கிறது சித்து. நாடுதான் முதலில் முக்கியம், அதன்பின் அரசியலை வைத்துக்கொள்ளலாம்.

சித்து செய்யும் அரசியலை இந்த தேசம் புரிந்து கொள்ளும். பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், முதல்வர் சரண்ஜித் சன்னி, பிரதமர் மோடி ஆகியோருக்கு எதிராகவே சித்து பேசி வருகிறார். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பாகிஸ்தான் செல்லக்கூடியவர்கள் இந்த வார்த்தைகளைப் பற்றி கருதமாட்டார்கள்

இவ்வாறு கம்பீர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x