Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி? - விவசாய சங்கங்கள் இன்று ஆலோசனை

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணியை நடத்துவது குறித்து விவசாய சங்கங்கள் இன்று ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளன.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், தீர்வு எட்டப்படாததால், புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். மேலும், டெல்லியில் முகாமிட்டுள்ள விவசாயிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ள போதிலும், உடனடியாக தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ள அவை தயாராக இல்லை. புதிய வேளாண் சட்டங்களை எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் முறைப்படி வாபஸ் பெறும் வரை, தங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விவசாயிகளின் போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு சார்பில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய விவசாய சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர், சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் தலைவர் தர்ஷன் பால், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்க முடிவு என்ற போதிலும், எங்கள் போராட்டத்தை உடனடியாக நாங்கள் (விவசாயிகள்) முடித்துக் கொள்ள போவதில்லை. ஏனெனில், ‘ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்’ திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. ஆனால், இன்று வரை அது செயல்படுத்தப்படவில்லை. அதேபோல, இந்த அறிவிப்பும் நீர்த்துபோகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? எனவே, எதிர்வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த சட்டங்களை முறைப்படி வாபஸ் பெற்ற பின்னரே, எங்கள் போராட்டத்தை நிறைவு செய்வோம்.

டிராக்டர் பேரணி

அதேபோல, வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை, குளிர்காலக் கூட்டத்தொடரின் போது தினசரி நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என அண்மையில் அறிவித்திருந்தோம். அந்த அறிவிப்பை இப்போது வரை நாங்கள் திரும்பப் பெறவில்லை. இந்த டிராக்டர் பேரணியை நடத்துவது குறித்து நாளை (இன்று) ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு தர்ஷன் பால் கூறினார்.

வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது துரதிருஷ்டவசமானது: உச்ச நீதிமன்றக் குழு உறுப்பினர் கருத்து

புதுடெல்லி: “புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது” என்று இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் உறுப்பினரான அனில் கன்வாட் வேதனை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்றம் சார்பில் கடந்த ஜனவரி மாதம் மூன்று பேர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் அறிக்கை, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அது பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், தற்போது புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்புக் குறித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் உறுப்பினரும், ‘ஷேத்காரி சங்கதனா’ என்ற விவசாய சங்கத்தின் தலைவருமான அனில் கன்வாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது அமலில் இருக்கும் பழைய வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் உழைப்பையும், அவர்களின் வருமானத்தையும் பெருமளவு சுரண்டிக் கொண்டிருக்கிறது. அவர்களின் விளைப்பொருட்கள் சந்தைப்படுத்தப்படுவதில் ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

ஆனால், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத சுதந்திரத்தை கொடுத்தது. அவர்களின் விளைப்பொருட்களை எங்கு வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் சந்தைப்படுத்தலாம் என்ற நிலையை உருவாக்க வழிவகை செய்தது. இருந்தபோதிலும், சில அரசியல் தலைவர்களின் தவறான வழிகாட்டுதல்களால், விவசாயிகள் இந்த சட்டங்களை எதிர்க்க தொடங்கினர். இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தால், அரசின் கொள்முதல் முறை ஒழிக்கப்படும்; விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படும் என்பன போன்ற பல பொய்யுரைகள் பரப்பபட்டன. இதனை அப்பாவி விவசாயிகளும் நம்பிவிட்டனர்.

அந்த சமயத்திலேயே, விவசாயிகளிடத்தில் அரசு நேரடியாக சென்று, இந்த வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கி இருக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை. இதன் விளைவாக, தற்போது நிலைமை கைமீறி சென்றுவிட்டது. புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு ஆகும். மக்கள் நலனோ, விவசாயிகள் நலனோ இதில் துளியளவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x