Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM

இடதுசாரி தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல் விவகாரம்; அனைத்து மாநில டிஜிபிக்களுடன் பிரதமர் மோடி, அமித் ஷா ஆலோசனை: லக்னோவில் நடந்த மாநாட்டில் உளவுத்துறை அதிகாரிகளும் பங்கேற்பு

லக்னோவில் நடந்த டிஜிபிக்கள் மாநாட்டில் அனைத்து மாநில போலீஸ் டிஜிபிக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இடதுசாரி தீவிரவாதம், சைபர் கிரைம், போதைப் பொருட்கள் கடத்தலைத் தடுப்பதில் உள்ள சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அப்போது விவாதிக்கப்பட்டன.

அனைத்து யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களின் போலீஸ் டிஜிபிக்கள், மத்திய ஆயுதப் படைகளின் இயக்குநர்கள் கலந்துகொண்ட 56-வது மாநாடு லக்னோவில் அமைந்துள்ள உத்தரப்பிரதேச காவல்துறை தலைமையகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற 2-ம் நாள் மாநாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், இணைய வழி குற்றங்கள், தீவிரவாத தாக்குதல்கள், போதைப் பொருள் கடத்தல், சிறைத்துறை சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப் பட்டிருந்தது.

2-ம் நாள் மாநாட்டு நிகழ்ச்சிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உளவுப்பிரிவுத் தலைவர் அரவிந்த் குமார், ரா உளவுப்பிரிவு தலைவர் சாமந்த் கோயல் உள்ளிட்டோரும் மாநாட்டில் பங்கேற்றனர். மத்திய ஆயுதப் படைகளின் இயக்குநர்கள், காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்பதற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த மாநாட்டு நிகழ்ச்சியில் நாட்டின் 37 முக்கிய நகரங்களில் அமைந்துள்ள மத்திய உளவுத்துறை, மாநில உளவுத்துறை தலைமையகங்களில் இருந்தும் இணையம் வழியாக அந்தந்த துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மாநாட்டில் சைபர் கிரைம், தரவுகளைக் கையாளுதல், தீவிரவாத தடுப்பில் போலீஸாரும், உளவுத்துறையினரும் எதிர்கொண்டுள்ள சவால்கள், இடதுசாரி தீவிரவாதம், போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதில் உள்ள சவால்கள், சிறைத்துறை சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக் கப்பட்டன.

மேலும், நாட்டில் பெருகி வரும் குற்றங்களை தடுப்பதில் காவல்துறையினர் எடுத்து வரும் நடவடிக்கைகள், காவல்துறையினரின் செயல்பாடு, காவல்துறைக்குத் தேவையான ஆயுதங்கள் தொடர்பாகவும் மாநாட்டில் விவா திக்கப்பட்டது.

2-ம் நாள் மாநாட்டின்போது தங்கள் மாநிலத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு நிலைமைகள் குறித்து பிரதமரிடம், போலீஸ் டிஜிபிக்கள் விளக்கினர். பின்னர் பிற்பகலில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மதிய உணவு அருந்தினார்.

இந்த 3 நாள் மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் விவாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 25 முதல் 30 வரையிலான விளக்கவுரைகள் பிரதமர் மோடி முன்பு சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிகிறது.

2-ம் நாள் மாநாட்டு நிகழ்வுகள் முடிந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இறுதி நாள் மாநாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார் என்று உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், உளவுத்துறை தலைவர்கள், புலனாய்வுத் துறை அதிகாரிகள், அனைத்து மாநில போலீஸ் டிஜிபிக்கள் வந்துள்ளதால் லக்னோ நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.

2014-ம் ஆண்டில், பிரதமராக பொறுப்பு ஏற்றதிலிருந்தே, மாநில போலீஸ் டிஜிபி மாநாட்டுக்கு மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்த மாநாட்டின் அனைத்து அமர்வுகளிலும் கலந்து கொள்ளும் அவர், சுதந்திரமாக பேசவும் அதிகாரப்பூர்மற்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் காவல்துறை தலைவர்களை ஊக்குவித்து வருகிறார். அதேபோல், நாட்டை பாதிக்கும் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சினைகள், முக்கியமான கொள்கை முடிவுகள் குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்து வருகிறார்.

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படியே, 2014-ம் ஆண்டு முதல், வழக்கமாக டெல்லியில் நடத்தப்பட்டு வந்த வருடாந்திர மாநாடுகள் மற்ற மாநிலங்களிலும் நடத்தப்படுகிறது. 2020-ம் ஆண்டு மட்டும் கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக, இணைய வழியாக மாநாடு நடைபெற்றது.

இந்நிலையில் இந்த மாநாட்டில் பிரதமர் பங்கேற்றதற்கு காங்கிரஸ் பொதுச் செயலரும், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி வதேரா எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், நாடு முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பிரியங்கா அப்போது வலியுறுத்தினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பிரியங்கா காந்தி கூறும்போது, “லக்கிம்பூர் கெரி கலவர வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவருடன் மேடையை பிரதமர் மோடி பகிர்ந்து கொள்ளக் கூடாது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பம் நீதியை விரும்புகிறது. இந்த நிலையில் அஜய் மிஸ்ரா மத்திய அமைச்சராக பதவியில் தொடர்ந்தால் நீதி கிடைக்காது. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள் ளேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x