Last Updated : 01 Mar, 2016 10:40 AM

 

Published : 01 Mar 2016 10:40 AM
Last Updated : 01 Mar 2016 10:40 AM

மத்திய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை?

மத்திய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று எந்த தகவலையும் வெளியிடவில்லை.

வழக்கமாக மத்திய பட்ஜெட்டின் போது ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து குறிப்பிடப்படும். ஆனால் இந்த முறை எந்த தகவலையும் அருண் ஜெட்லி குறிப்பிடவில்லை.

இது குறித்து ஓய்வுபெற்ற பிரிகேடியர் குர்மீத் கன்வால் கூறும்போது, ‘‘நான் கடந்த 17 ஆண்டுகளாக பட்ஜெட்டை கூர்ந்து கவனித்து வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவேன். ஆனால், முதல் முறையாக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ராணுவ நிதி குறித்து ஒரு வார்த்தை கூட வெளியிடப்படவில்லை’’ என்றார்.

ஒரே பதவி; ஒரே ஓய்வூதிய திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டி இருப்பதால் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எந்த தகவலையும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளியிடாதது ராணுவத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதி 7.7 சதவீதம் உயர்த்தப்பட்டு 2,46,727 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ-க்கு தாராளம்... ரூ.177 கோடி கூடுதல் நிதி

சிபிஐ-க்கு இந்த பட்ஜெட்டில் ரூ.177.67 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சாரதா நிதி நிறுவன ஊழல், வியாபம் ஊழல், சீட்டு நிறுவன ஊழல்கள் என நிதி சார்ந்த குற்ற வழக்குகளை விசாரித்து வரும் சிபிஐ துறை நிதி பற்றாக்குறையால் தள்ளாடி வருவதாக கூறப்படுகிறது. இதனால் போதுமான அளவுக்கு அதிகாரிகள் நியமிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு தீர்வு காணும் வகையில், இந்த பட்ஜெட்டில் சிபிஐ-க்கு மொத்தமாக ரூ.727.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.177.67 கோடி கூடுதலாகும். கடந்த ஆண்டு சிபிஐ-க்கு ரூ.550.08 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த கூடுதல் நிதி மூலம் சிபிஐ துறை தனது பயிற்சி மையத்தை நவீனமாக்குவது, ‘இ-நிர்வாகம்’, தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மையங் கள், புதிய அலுவலகங்கள், கிளை அலுவலகங்களுக்கான வீடுகள் ஆகிய செலவினங்களை சமாளித் துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதே போல் ஊழல் ஒழிப்பு விசாரணை அமைப்புகளான லோக் பால் மற்றும் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றுக்கான நிதியும் இந்த பட்ஜெட்டில் சற்று உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த முறை ரூ.7.18 கோடியாக இருந்த லோக் பால் அமைப்பின் நிதி இந்த முறை 19.49 சதவீதம் வரை உயர்த்தப் பட்டு ரூ.8.58 கோடியாக ஒதுக்கப் பட்டுள்ளது. இதே போல் லஞ்ச ஒழிப்புத் துறையின் நிதி ரூ.24.26 கோடியில் இருந்து ரூ.27.68 கோடியாக 14 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

அணு மின் திட்டத்துக்கு 3,000 கோடி

நாடு முழுவதும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அணு மின் திட்டங்களை உத்வேகப்படுத்தும் நோக்கில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இந்த துறைக்கு ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, ‘‘மின் உற்பத்தி நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்பதற்கு, இந்த துறைக்கான மூலதனங்கள் பெருமளவில் தேவைப்படுகின்றன. இதற்காக 15 முதல் 20 ஆண்டுகளுக்கான விரிவான திட்டங்களை அரசு வகுத்துள்ளது. இதன் மூலம் அணு மின் உற்பத்தி துறைக்கான முதலீடுகளை எளிதாக ஈர்க்க முடியும். இந்த பட்ஜெட்டில் இந்த துறைக்காக ஆண்டுக்கு ரூ.3,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

பத்திரிகையாளர்களுக்கு பட்ஜெட் நகல் இல்லை

வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட் நகல் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

மக்களவையில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்ற கட்டிடத்தின் குறிப்பிட்ட கவுன்ட்டர்களில் பத்திரிகையாளர்களுக்கு பட்ஜெட் நகல் தரப்படும். ஆனால் இந்த ஆண்டு இந்த நகல் பத்திரிகையாளர்களுக்கு தரப்படவில்லை. மரங்களை காக்கும் மற்றும் பசுமை பேணும் குறிக்கோளின் கீழ் பட்ஜெட் நகலை மத்திய அரசு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

நிதி அமைச்சகம் மற்றும் பத்திரிகை தகவல் மையத்தின் இணைய தளங்களில் பட்ஜெட் நகல் வெளியிடப்பட்டது. பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பிற விவரங்களை கொண்ட பொது பட்ஜெட் நூற்றுக்கணக்கான பக்கங்களை கொண்டது.

இருக்கையில் அமர்ந்து பட்ஜெட் வாசித்த ஜேட்லி

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சுமார் 25 நிமிடங்கள் எழுந்து நின்று பட்ஜெட் வாசித்தார். உடல்சோர்வு காரணமாக அவரால் தொடர்ந்து நிற்க முடியவில்லை.

எனவே, இருக்கையில் அமர்ந்து பட்ஜெட்டை வாசிக்க அவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம் அவர் அனுமதி கோரினார். அவர் அனுமதி வழங்கியதும் இருக்கையில் அமர்ந்து பட்ஜெட்டை வாசித்தார். கடந்த 2014, 2015 பொது பட்ஜெட்டுகளின்போது முதுகு வலி காரணமாக ஜேட்லி இருக்கையில் அமர்ந்து பட்ஜெட்டை வாசித்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x