

அனைவருக்கும் வீடு திட்டத்தை நிறைவேற்ற நிலம் கையகப் படுத்துதல் மசோதா அவசியம் என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது 2013-ம் ஆண்டில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா கொண்டு வரப்பட்டது. பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அந்த மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் திருத்தப்பட்ட மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நிலங்களைக் கையகப்படுத்தும்போது 70 சதவீத உரிமையாளர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாததால் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. அடுத்தடுத்து பலமுறை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. எனினும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அவசர சட்டத்தை மத்திய அரசு கைவிட்டது. தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனையில் மசோதா உள்ளது.
இந்தப் பின்னணியில் நிலம் மசோதா தொடர்பாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு மக்களவையில் நேற்று கூறியதாவது:
வரும் 2020-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த கனவை நனவாக்க நிலம் கையகப்படுத்துதல் மசோதா சட்டமாவது அவசியம். எனவே இந்த மசோதா விவகாரத்தில் எதிர்க்கட்சிகளிடம் சில கருத்தொற்றுமைகளை ஏற்படுத்த அரசு விரும்புகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.