Published : 20 Nov 2021 03:25 PM
Last Updated : 20 Nov 2021 03:25 PM

ஆணவத்தின் சக்தி தோற்கடிப்பு; வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுதல் கண்துடைப்புதான்: சிவசேனா காட்டம்

பிரதமர் மோடி, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே | கோப்புப் படம்.

மும்பை 

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் பிரதமர் மோடி திரும்பப் பெறுவதாக அறிவித்தது, ஆணவத்தின் சக்தி தோற்கடிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுதல் அறிவிப்பு சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து நடந்த கண்துடைப்புதான் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில், பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுதல் குறித்த அறிவிப்பைச் சுட்டிக்காட்டி தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''மத்திய அரசு இந்த 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் போது, எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கித்தான் நிறைவேற்றியது. அதன்பின் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை முற்றிலும் நிராகரித்தது.

விவசாயிகள் போராட்டம் நடத்திய இடத்தில் அவர்களுக்குக் குடிக்க நீர் கிடைக்கவிடாமல், மின்சாரம் கிடைக்கவிடாமல் மத்திய அரசு இடையூறு செய்தது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காலிஸ்தான்கள், பாகிஸ்தானியர்கள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தியது மத்திய அரசு.

ஆனால், இவ்வளவும் நடந்தபோதிலும், விவசாயிகள் தங்கள் கோரிக்கையான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதிலிருந்து பின்வாங்கவில்லை.

இந்தச் சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கும், முதலாளிகளுக்கும் ஆதரவான சட்டம். இந்தப் போராட்டத்தில் 550 விவசாயிகள் உயிரிழந்தனர். லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது மத்திய அமைச்சரின் மகன் ஒருவர் காரை ஏற்றினார். ஆனால், பிரதமர் மோடி விவசாயிகள் உயிரிழப்புக்கு ஒரு வார்த்தை கூட இரங்கல் தெரிவிக்கவில்லை.

விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொள்ளமாட்டார்கள் என உணர்ந்தபின், உத்தரப் பிரதேசம்,பஞ்சாப் இடைத்தேர்தல், 13 மாநில இடைத் தேர்தலில் தோல்வி அடைந்தபின், இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு தேர்தலை முன்வைத்து எடுக்கப்பட்ட, கண்துடைப்பு நடவடிக்கை. ஆனால், இந்த வெற்றி விவசாயிகளின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி.

மகாபாரதம், ராமாயணம் நமக்குக் கற்றுக்கொடுப்பது என்னவெனில், ஆணவம் ஒடுக்கப்படும், அழிக்கப்படும் என்பதுதான். ஆனால், போலி இந்துத்துவாவாதிகள், இதை மறந்துவிட்டார்கள். உண்மை, நீதியின் மீது தாக்குதல் நடத்தி, ராவணர் போல் நடக்கிறார்கள்.

எதிர்காலத்தில் இதுபோன்ற ஆணவத்துடன் மத்திய அரசு நடக்காமல் சட்டம் இயற்றும் முன் தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையைப் பெற்றுச் செயல்பட வேண்டும். அநீதி, சர்வாதிகாரத்துக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும்''.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x