Published : 20 Nov 2021 12:57 PM
Last Updated : 20 Nov 2021 12:57 PM

தேநீர்க் கடை நடத்திக்கொண்டே 26 நாடுகளுக்குப் பயணம் செய்த முதியவர் காலமானார்: கேரள சுற்றுலாத்துறை அஞ்சலி

கேரளாவில் தேநீர்க் கடை நடத்தி அதில் கிடைத்த வருமானத்தின் மூலம் 26 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த முதியவர் கே.ஆர்.விஜயன் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 71.

கேரளாவில் தேநீர்க் கடை நடத்தி உலகம் முழுவதும் சுற்றிய கே.ஆர்.விஜயன் அனைவராலும் அறியப்படக்கூடியவர். கொச்சின் நகரைச் சேர்ந்த கே.ஆர்.விஜயன், அவரின் மனைவி மோகனாவுடன் ஏராளமான நாடுகளுக்குச் சென்று கேரள மாநிலத்தில் பிரபலமானவர்.

சுற்றுலா செல்வதற்காகவே வங்கியில் கடன் பெற்று அந்தக் கடனையும் முறையாகத் திருப்பிச் செலுத்தியுள்ளார் விஜயன். அவரின் வங்கிக் கணக்குகளைப் பார்த்த வங்கி நிர்வாகம் தொடர்ந்து சுற்றுலா செல்லவும் கடன் அளித்துள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் ரஷ்யாவிலிருந்து விஜயனும், அவரின் மனைவி மோகனாவும் சுற்றுலாவை முடித்துக்கொண்டு கேரளா திரும்பினர். அடுத்ததாக, ஜப்பான், வியட்நாம், கம்போடியா நாடுகளுக்குச் செல்லவும் இருவரும் திட்டமிட்டிருந்த நிலையில் விஜயன் திடீரென்று காலமானார்.

விஜயன் தனக்குக் கிடைக்கும் தேநீர் விற்பனையின் வருமானத்தின் மூலம் இதுவரை 26 நாடுகளைக் கடந்த 14 ஆண்டுகளாகச் சுற்றிப் பார்த்துள்ளார். கே.ஆர்.விஜயன், மோகனா தம்பதியின் பெயர் இந்திய ஊடகங்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச ஊடகங்கள், சுற்றுலாவுக்கான பிரத்யேகத் தளங்கள், ஊடகங்களிலும் பிரபலமாகும்.

கொச்சியில் உள்ள சலீம் ராஜன் சாலைக்கு அடுத்ததாக கே.ஆர்.விஜயனின் தேநீர்க் கடை அமைந்துள்ளது. இதுவரை சென்ற 26 நாடுகள், 6 கண்டங்கள், அதன் புகைப்படங்கள், அங்கு விஜயன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைக் கடையில் வைத்திருந்தார். இதைப் பார்ப்பதற்காகவே இவரின் கடைக்கு ஒரு கூட்டம் வரும்.

முதன்முதலில் 2007-ம் ஆண்டு எகிப்து நாட்டுக்கு விஜயன், மோகனா தம்பதி சுற்றுலா செல்ல விரும்பி, வங்கியில் கடன் கேட்டனர். நீண்ட இழுபறிக்குப் பின் வங்கியில் கடன் கிடைத்தது. இருவரும் சுற்றுலா சென்றுவந்தபின், வங்கியில் பெற்ற கடனை விஜயன் முறைப்படி திருப்பிச் செலுத்தினார். இதனால் வங்கியில் கிடைத்த நற்பெயரைக் கொண்டு அடுத்தடுத்து நாடுகளுக்குச் சுற்றுலா செல்ல விஜயன் தொடங்கினார்.

விஜயனின் புகழ் கேரளாவில் பரவத் தொடங்கியபின், பலரும் விஜயன், மோகனாவுக்குச் சுற்றுலா செல்ல ஸ்பான்ஸர் செய்து உதவி செய்தனர். சிலர் டிக்கெட் எடுத்துக் கொடுப்பது, தங்குமிடம் வழங்குவது எனப் பல செலவுகளைச் செய்தனர். ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ரஷ்யா நாடுகளுக்கு ஸ்பான்ஸர் மூலமே விஜயன் சுற்றுலா சென்றுவந்தார்.

விஜயனின் புகழைப் பார்த்த ஒரு சுற்றுலா நிறுவனம், தனது நிறுவனத்தின் தூதராக விஜயனை நியமித்து, தன்னுடைய விளம்பரங்களில் விஜயனைப் பயன்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு, "சாயா வீட்டு விஜயன்டேயும் மோகனாயுடேயும் லோக சஞ்சாரங்கள்" என்ற தலைப்பில் விஜயன், மோகனா தம்பதி புத்தகம் வெளியிட்டு, அதில் தங்களின் சுற்றுலா அனுபவங்களைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கேரளாவில் பெருவாரியாக அறிவியப்பட்ட தேநீர்க் கடை அதிபர் விஜயனின் திடீர் மறைவுக்கு கேரள சுற்றுலாத் துறையும் அஞ்சலி செலுத்தியுள்ளது. கேரள சுற்றுலாத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயனின் புகைப்படத்தைப் பதிவிட்டு, “இறுதிப் பயணத்தைத் தொடங்கிய துணிச்சல் பயணி” எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x