

மத்திய அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் சட்டம் இயற்றப்படுவதும், நீக்கப்படுவதும் பாஜக அரசில் மட்டும்தான் நடக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடி நேற்று திடீரென அறிவித்தார். கடந்த ஓராண்டாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிய நிலையில் அவர்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஆனால், 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்து அமைச்சரவையைக் கூட்டாமல், கலந்து பேசாமல், ஒப்புதல் பெறாமல் பிரதமர் மோடி தன்னிச்சையாக அறிவித்துள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பிரதமர் மோடியின் மிகச் சிறந்த அரசியல் திறன் குறித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்த அவரின் அறிவிப்பையும் உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழ்ந்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவரோ, விவசாயிகள் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி என்று தெரிவித்தார். விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளார் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 மாதங்களாக இந்தத் தகுதிவாய்ந்த தலைவர்கள், தகுதியான, இந்த நல்ல ஆலோசனைகளைக் கூறாமல் எங்கு சென்றார்கள்?
நீங்கள் ஒன்று கவனத்தீர்களா. மத்திய அமைச்சரவையைக் கூட்டாமல், ஒப்புதல் பெறாமல் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை முன் அனுமதி பெறாமல், அமைச்சரவையைக் கூட்டாமல் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் அறிவிப்பை வெளியிடுவது பாஜக அரசில் மட்டும்தான் நடக்கும்''.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்