Last Updated : 20 Nov, 2021 11:20 AM

 

Published : 20 Nov 2021 11:20 AM
Last Updated : 20 Nov 2021 11:20 AM

எந்த ஜனநாயகத்திலும் ஆணவத்துக்கு இடமில்லை; எதிர்காலப் போராட்டத்திலும் தோளோடு தோள் நிற்போம்: விவசாயிகளுக்கு ராகுல் காந்தி கடிதம்

எந்த ஜனநாயகத்திலும் ஆணவத்துக்கு இடமில்லை. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தது விவசாயிகளுக்குக் கிடைத்த வரலாற்று வெற்றி. எதிர்காலப் போராட்டங்களிலும் விவசாயிகளின் தோளோடு தோளாக காங்கிரஸ் நிற்கும் என ராகுல் காந்தி விவசாயிகளுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், அவற்றைத் திரும்பப் பெறக் கோரியும் விவசாயிகள் கடந்த ஓராண்டாகப் போராடி வந்தனர். இந்தப் போராட்டத்தின் விளைவாக பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக நேற்று அறிவித்தார். வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்தச் சட்டங்கள் வாபஸ் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.

இந்தச் சூழலில் அடுத்த ஆண்டு பஞ்சாப், கோவா, உ.பி. உள்ளிட்ட 5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்காகவே இந்த வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெற்றுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

இந்நிலையில் விவசாயிகளுக்குக் கடிதம் எழுதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:

''3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது இது விவசாயிகளின் அறப் போராட்டத்துக்குக் கிடைத்த வரலாற்று வெற்றி. இந்தப் போராட்டம் இதோடு ஓய்ந்துவிடவில்லை.

சில கார்ப்பேரட்டுகளின் விளையாட்டுக்காக விவசாயிகளை அவர்களின் சொந்த நிலத்திலேயே அடிமையாக்கும் சதிச் செயலைச் செய்ய பிரதமர் மோடி மீண்டும் துணிய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் எனப் பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார், அதை நிறைவேற்ற, பணியாற்றக் கூறுங்கள். தங்களுக்கு எது நலன் பயக்கும், எது நல்லது அல்ல என்பது விவசாயிகளுக்குத் தெரியும். விவசாயிகள் தங்களின் எதிர்காலத் திட்டம் குறித்து விரைவில் வெளியிட வேண்டும். அதிகாரம் என்பது சேவை செய்வதற்கான ஒரு ஊடகக் கருவி என்பதை பிரதமர் மறந்துவிடக் கூடாது. எந்த ஜனநாயகத்திலும் நேர்மையின்மை, பிடிவாதம், ஆணவத்துக்கு இடமில்லை

உறைபனி, சுட்டெரிக்கும் வெயில், கடும் மழை ஆகியவற்றுக்கு மத்தியில், அனைத்துவிதமான அட்டூழியங்கள், கொடுமைகளுக்கு மத்தியில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி விவசாயிகள் வென்றுள்ளனர்.

காந்திய வழியில் நின்ற விவசாயிகள், சர்வாதிகார ஆட்சியாளரின் ஆணவத்துக்கு எதிராகப் அறப் போராட்டம்நடத்தி, அவர்களின் முடிவைத் திரும்பப் பெற வைத்துள்ளார்கள். இது பொய்க்கு எதிராக உண்மைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றிக்கு உதாரணம். தொடக்கத்திலேயே விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு செவி சாய்த்திருந்தால் இது நடந்திருக்காது.

குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெறுங்கள், சர்ச்சைக்குரிய மின்சாரத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுங்கள், வேளாண் சாதனங்களுக்கு வரிக்குறைப்பு, டீசல் விலை குறைப்பு, விவசாயிகளின் கடன் பிரச்சினை போன்றவற்றை வலியுறுத்துங்கள்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்தப் போராட்டத்தைப் போன்று எதிர்காலத்தில் நடக்கும் போராட்டங்களில் உங்கள் குரலாக ஒவ்வொரு காங்கிரஸாரும் இருந்து தோளோடு தோள் நிற்பார்கள் என நான் உறுதியளிக்கிறேன்''.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x