

நாம் யாரையும் மதமாற்றம் செய்யத் தேவையில்லை. மாறாக எப்படி வாழ்வது என்று சொல்லிக் கொடுத்தால் மட்டுமே போதும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் ஹோஷ் ஷிவிர் என்ற நிகழ்வை ஒட்டி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவை விஸ்வ குருவாக உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்காக நாம் யாரையும் மதமாற்றம் செய்யத் தேவையில்லை. மாறாக எப்படி வாழ வேண்டும் என்பதை மட்டும் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தால் போதுமானது. நாம் பாரத தேசத்தில் பிறந்துள்ளோம். அதனால் ஒட்டுமொத்த உலகுக்கும் நாம் பாடம் கற்றுக் கொடுக்கத் தகுதியானவர்கள். நமது மார்க்கம் நல்ல மானிடர்களை உருவாக்குகிறது. அவரவர் பின்பற்றும் வழிபாட்டு முறையை மாற்றாமலேயே நமது மார்க்கம் யாரையும் நல்ல மனிதர்களை உருவாக்கக் கூடியது. இந்த அடிநாதத்தை சிதைக்க முயற்சிப்பவர்கள் தேசத்தின் ஒற்றுமையால் சரி செய்யப்படுவார்கள்.
இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.