

தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு விரக்தியில் இருக்கிறார். அது ஒட்டுமொத்த ஆந்திராவுக்கே தெரியும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று, ஆந்திர சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இருக்கும் போதே, அமைச்சர்கள் கோடலி நானி, அம்படி ராம்பாபு, சத்யநாராயணா ஆகியோர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி உள்ளிட்டோரை தரக் குறைவாகப் பேசியதாக தெரிகிறது.
இதற்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சந்திரபாபு நாயுடு, "எனது 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற கீழ்த்தரமான பேச்சுககளை கேட்டதில்லை. எனது மனைவி மிகவும் நல்லவர். அவரது தியாகம் மேன்மையானது. எனக்காகவும், எங்கள் குடும்பத்திற் காகவும் இன்றளவும் உழைப்பவர்.
நான் மக்கள் பணியாற்றும் போதும், எனக்கு உறுதுணையாக நிற்பவர். அவர் குறித்து எப்படி இங்கு பேசலாம்? மேலும், எனது வீட்டுப் பெண்கள் பலர் குறித்தும் பல விதமாக பேசியுள்ளீர்கள். இது சரியல்ல" என கண்ணீர் மல்க கூறினார்.
பின்னர் சுதாரித்துக்கொண்ட சந்திரபாபு நாயுடு, "இதுபோல் கீழ்த்தரமாக நடந்துகொள்பவர்கள் இருக்கும் அவைக்கு நான் இனி வரமாட்டேன். அப்படி வந்தால் முதல்வராக தான் கால் பதிப்பேன்" எனக் கூறி வெளிநடப்பு செய்தார். அவருடன் தெலுங்கு தேச கட்சியினரும் வெளியேறினர்.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்துப் பேசியுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, "சந்திரபாபு நாயுடு விரக்தியில் இருக்கிறார். அவர் தனது சொந்த தொகுதிக்கு உட்பட்ட குப்பம் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலை இழந்தார். இதனால் அவர் கடுமையான விரக்தியில் உள்ளார். இது அனைவருக்குமே தெரியும். அதனால் அவர் என்ன பேசுகிறோம். என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் இருக்கிறார். இதற்கு முன்னர் சட்டப்பேரவையில் பலமுறை தேவையற்ற சர்ச்சைகளை சந்திரபாபு நாயுடு எழுப்பியுள்ளார். இப்போது அவரை மக்கள் தூக்கி எறிந்ததால் இப்படி நடந்து கொள்கிறார்" என்றார்.
கவுரவர்களின் அவை:
சட்டப்பேரவைக்கு வெளியில் வந்து பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு, "ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அவை மகாபாரதத்தில் வரும் கவுரவர்களின் அவை போல் பெண்களை இழிவுபடுத்தும் அவையாக இருக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எப்போதும் எங்கள் கட்சியினரை உணர்வுப்பூர்வமாக உடைக்கும் செயலில் ஈடுபடுகின்றது. மாண்பற்ற இந்த அவைக்கு 2024 ஆம் ஆண்டு வரை நான் வரமாட்டேன்" என்று கூறிச் சென்றார்.