

ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருமலையில் முகூர்த்த நாட்களில் இனி இலவச திருமணங்கள் செய்துவைக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் தலைமையில் ‘கல்யாணம்’ திட்டம் தொடர்பான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அதிகாரி சாம்பசிவ ராவ் பேசியதாவது:
ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருமலையில் திருமணம் செய்துகொள்ள பலர் விரும்புகின்றனர். ஆனால் இவர்கள் திருமண மண்டபம், புரோகிதர்கள், மேள தாளங்கள் என பல்வேறு வகையில் செலவு செய்ய நேரிடுகிறது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, புரோக்கர்கள் கள்ள சந்தையில் பக்தர்களை ஏமாற்றி வருகின்றனர்.
இதைத் தடுக்கும் வகையில் தேவஸ்தானம் சார்பில் இனி இலவச திருமணம் செய்து வைக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். திருமணம் நடந்த அரை மணி நேரத்தில் திருமண சான்றிதழும் அவர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு சாம்ப சிவ ராவ் தெரிவித்தார்.