விவசாயிகள் ஓராண்டு போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதை மறக்க முடியாது: சரத் பவார் கடும் சாடல்

விவசாயிகள் ஓராண்டு போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதை மறக்க முடியாது: சரத் பவார் கடும் சாடல்
Updated on
1 min read

3 விவசாயச் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற மத்திய அரசு அறிவித்துள்ள போதிலும் மத்திய அரசின் மோசமான நடவடிக்கையால் விவசாயிகள் ஓராண்டு போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதை யாரும் மறக்க முடியாது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று காலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அதிரடியாக அறிவி்ததார். அவர் கூறிகையில் "விவசாயிகளின் நலனுக்காகவே மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால், ஒரு பகுதி விவசாயிகளின் ஒருபகுதியினர் இந்தச் சட்டத்தை எதிர்த்தனர். வேளாண் சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளிடம் விளக்கி எடுத்துச் செல்ல முயற்சித்தோம். போராடிய விவசாயிகளுடன் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

சில திருத்தங்களைக் கூட மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினோம். விவசாயிகள் நீதிமன்றம் சென்றனர். மூன்று வேளாண் சட்டங்களுக்காக போராடிய விவசாயிகளிடம் ஆதரவைப் பெற முடியவில்லை. இந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும். இதனால், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு களப் பணிகளுக்குத் திரும்ப வேண்டும்" என்று பேசினார்.

இதற்கு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியதாவது:

விவசாய சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உ.பி. பஞ்சாப் தேர்தல்கள் நெருங்கி வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மக்கள் ஏற்கெனவே பாஜகவை புறக்கணிக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாகவே விவசாய சட்டங்களை ரத்து செய்யும் இந்த முடிவை எடுத்துள்ளனர். மத்திய அரசின் மோசமான நடவடிக்கையால் விவசாயிகள் ஓராண்டு போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதை யாரும் மறக்க முடியாது. விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது, அவர்கள் கைது செய்யப்பட்டதையும் மறக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in