Published : 19 Nov 2021 05:15 PM
Last Updated : 19 Nov 2021 05:15 PM

கண்ணீர் விட்டு அழுத சந்திரபாபு நாயுடு: மனைவி பற்றிய அவதூறால் சபதமிட்டு சட்டப் பேரவையிலிருந்து வெளியேறினார்

சட்டப்பேரவையில் கண்ணீர் விட்டு அழுத சந்திரபாபு நாயுடு | படம்: ஏஎன்ஐ.

அமராவதி

தனது மனைவியைப் பற்றித் தரக்குறைவாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் பேசியதை அடுத்து, சட்டப்பேரவையில் கண்ணீர் விட்டு அழுத தெலங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, முதல்வராகாமல் அவைக்குள் திரும்ப வரமாட்டேன் என சபதமிட்டு வெளியேறினார்.

ஆந்திர மாநில சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இன்று காலை அவை தொடங்கியதும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ அம்பதி ராம்பாபு, பேசுகையில், “எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்து, சந்திரபாபு நாயுடுவின் மனைவி குறித்து சில அவதூறான, நாகரிகமற்ற கருத்துகளைத் தெரிவித்தார்.

இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள், பேரவைத் தலைவர் முன்வந்து கூச்சலிட்டு, அம்பதி மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு ஆளும் கட்சித் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தெலுங்கு தேசம் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

சில மணி நேரத்துக்குப் பின் அவை மீண்டும் கூடியது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசும்போது மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது:

''நான் ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாவிட்டாலும் சரி, என் மனைவி நான் அரசியலில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்துவதைத் தவிர அவர் எந்தக் காலத்திலும் அரசியலுக்குள் வந்ததில்லை. இதுவரை அவர் என்னை அவமானப்படுத்தியதில்லை.

என்னுடைய 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இதுபோன்று நான் வருத்தப்பட்டதும் இல்லை. நான் பல போராட்டங்களைப் பார்த்திருக்கிறேன். என் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறேன். சட்டப்பேரவையில் காரசாரமான வாதங்களில் பங்கேற்றிருக்கிறேன்.

எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும், ஆளும் கட்சியாக இருந்தபோதிலும் பலமுறை விவாதங்களில் பேசியிருக்கிறேன். இதுபோன்று எதிர்க்கட்சிகள் தரக்குறைவாக நடந்ததை நான் இதுவரை பார்த்தது இல்லை.

மகாபாரத்தில் கவுரவர்கள் நடத்திய சபையைப் போன்று இருக்கிறது. பாஞ்சாலியின் துகிலை துரியோதனன் எடுத்தபோது, பாண்டவர்களை அவமதித்ததைப் போன்று உணர்கிறேன். ஆனால், இவை அனைத்தையும் பார்த்து சபாநாயகர் மவுனமாக இருப்பது வேதனையாக இருக்கிறது.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் தவறான வார்த்தைகளால் எனது மனைவியைப் பேசுகிறார்கள். அதற்கு பதில் அளித்துப் பேச எனக்கு சபாநாயகர் வாய்ப்பு வழங்கவில்லை, பேசவிடவில்லை. இதுபோன்ற அவையில் இனிமேல் நான் பங்கேற்கமாட்டேன். என் உரிமைக்காகப் போராடுவேன்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக என்னை அவமானப்படுத்தினீர்கள். என் சுயமரியாதையை அடமானம் வைத்து நான் சட்டப்பேரவைக்கு வரமாட்டேன். மக்களிடம் சென்று போராடி, நான் அவர்களின் ஆதரவைப் பெறுகிறேன். மக்களின் தீர்ப்பால் மீண்டும் நான் முதல்வராக வருவேன். அப்போது இந்த அவைக்குள் வருகிறேன். அதுவரை இந்த அவைக்குள் வரமாட்டேன்”.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு சபதமிட்டு வெளியேறினார்.

இந்த வார்த்தையைத் தெரிவித்தபோது, சில வினாடிகள் கண்ணீர் விட்டு அழுத சந்திரபாபு நாயுடு, முகத்தைத் தனது கைக்குட்டையால் மூடிக்கொண்டு பேச முடியாமல் தவித்தார். பின்னர் சட்டப்பேரவையில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியேறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x