

3 விவசாய சட்டங்களையும் திரும்ப பெறும் மத்திய அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், சர்வாதிகாரம் மட்டுமே ஒரே தீர்வு என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களுக்கு இன்று காலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அதிரடியாக அறிவி்ததார். அவர் கூறிகையில் "விவசாயிகளின் நலனுக்காகவே மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால், ஒரு பகுதி விவசாயிகளின் ஒருபகுதியினர் இந்தச் சட்டத்தை எதிர்த்தனர். வேளாண் சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளிடம் விளக்கி எடுத்துச் செல்ல முயற்சித்தோம்.
போராடிய விவசாயிகளுடன் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினோம். சில திருத்தங்களைக் கூட மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினோம். விவசாயிகள் நீதிமன்றம் சென்றனர். மூன்று வேளாண் சட்டங்களுக்காக போராடிய விவசாயிகளிடம் ஆதரவைப் பெற முடியவில்லை. இந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும். இதனால், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு களப் பணிகளுக்குத் திரும்ப வேண்டும்" என்று பேசினார்.
இதற்கு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். 3 விவசாய சட்டம் ரத்து குறித்து ஒருவர் வெளியிட்டிருந்த பதிவை பகிர்ந்து கொண்ட கங்கனா கூறுகையில் ‘‘ ஏமாற்றம், வெட்கக்கேடானது, முற்றிலும் நியாயமற்றது எனக் கூறியுள்ளார்.
அவர் டேக் செய்திருந்த மற்றொருவரின் பதிவில் ‘‘ நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்லாமல், தெருக்களில் இருப்பவர்கள் சட்டங்களை இயற்ற ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், இதுவும் ஜிஹாதி தேசம்தான். இப்படி விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்து இருந்தது.
இதனைத் தொடர்ந்து கங்கனா இரண்டாவது ஒரு பதிவையும் அவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படத்தைப் பகிர்ந்துள்ளார். "தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, சர்வாதிகாரம் மட்டுமே ஒரே தீர்வு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.