

இந்தியாவின் கரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு 110 நாடுகள் பரஸ்பர அங்கீகாரம் அளித்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கல்வி, வர்த்தகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்காக உலகின் மிகப்பெரிய நாடான இந்தியாவின் கரோனா தடுப்பூசி சான்றிதழுக்குப் பல நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன. இதைச் சுட்டிக்காட்டி, உலகின் பல்வேறு நாடுகளும் அங்கீகாரம் வழங்குமாறு மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தற்போது 110 நாடுகள் இந்தியாவின் கரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளன. குறிப்பாக கோவிஷீல்ட், உலக சுகாதார அமைப்பு, தேசிய அளவில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட தடுப்பூசிகளை முழுமையாகச் செலுத்தியவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ் ஆகியவற்றை ஏற்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து பல நாடுகள் பரஸ்பர அங்கீகாரத்தை வழங்கியுள்ளன. சில நாடுகள் இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏதும் செய்யாவிட்டாலும்கூட, இந்தியர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருந்தாலோ, உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியைச் செலுத்தியிருந்தாலோ அவர்களை அனுமதிக்கின்றன.
இந்தியாவிலிருந்து வருவோர் முழுமையாகத் தடுப்பூசி செலுத்தியிருந்தால், அல்லது உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தியிருந்தால் அவர்களைத் தங்கள் நாட்டுக்குள் விமான நிலையத்தை விட்டு வெளியேறவும் நாடுகள் அனுமதிக்கின்றன. வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளன
அதேநேரம் தங்கள் நாட்டுக்குள் வந்தபின் அடுத்த 14 நாட்களுக்கு தங்கள் உடல்நிலையைத் தாங்களே கண்காணித்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஒருவேளை தடுப்பூசி ஒரு டோஸ் மட்டும் செலுத்தியிருந்தாலோ அல்லது முழுமையாகச் செலுத்தாமல் இருந்தாலோ, விமான நிலையத்திற்கு வந்தவுடன் அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும்.
கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வீட்டில் 7 நாட்கள் தனிமையும், 8-வது நாளில் நெகட்டிவ் வந்தால், மறுபடியும் பரிசோதனை நடத்தப்பட்டு அதில் நெகட்டிவ் வந்தால், அடுத்த 7 நாட்களுக்கு சம்பந்தப்பட்ட நபர் அவரின் உடலைக் கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.