நான் எதைச் செய்தாலும் தேச நலனுக்காகவே செய்வேன்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

நான் எதைச் செய்தாலும் தேச நலனுக்காகவே செய்வேன்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
Updated on
1 min read

மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்த பிரதமர் மோடி, நான் எதைச் செய்தாலும் அதை தேச நலனின் அடிப்படையிலேயே செய்வேன் என்று கூறினார்.

1. அத்தியாவசியப் பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டைத் தளர்த்தி சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசியப் பொருளாகக் கொள்ளப்படும். 2. ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வசதி செய்து கொடுத்தல் 3. ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது ஆகிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வந்தனர்.

இந்தப் போராட்டம் இன்னும் ஒரு சில நாட்களில் ஓராண்டை அடையவுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று காலை நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "நான் எதைச் செய்தேனோ அதை விவசாயிகளின் நலனுக்காகவே செய்தேன். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேனோ அது தேசத்தாகவே செய்கிறேன். உங்களின் ஆசிகளுடன் அதைச் செய்கிறேன். நான் எனது கடின உழைப்பில் எதையும் விட்டு வைத்ததில்லை. இன்று, நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். இந்த தேசத்தின் கனவுகள், உங்களின் கனவுகள் நினைவாவதற்காக நான் இன்னும் கடினமாக உழைப்பேன் என உறுதியளிக்கிறேன்.

நாம் புதிதாகத் தொடங்குவோம். போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகள் எல்லோரும் தங்களின் போராட்டங்களைக் கைவிட்டு அவரவர் பணிக்குச் செல்ல வேண்டுகிறேன். விவசாயிகளின் நலனும், விவசாய மேம்பாடும் தான் எங்களின் பிரதானப் பணி" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் விரைவில் கூடவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதற்கான அரசியல் சாசன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in