Last Updated : 19 Nov, 2021 09:31 AM

 

Published : 19 Nov 2021 09:31 AM
Last Updated : 19 Nov 2021 09:31 AM

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடிவு செய்துள்ளோம்: பிரதமர் நரேந்திர மோடி அதிரடி அறிவிப்பு

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இன்று (நவ.19) காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். சரியாக காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இத்தகைய அறிவிப்பு வரும் என யாரும் எதிர்பார்க்காத நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது ஒட்டுமொத்த தேசத்தையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் கூறியுள்ளார். மேலும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு அவர்கள் தத்தம் பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்று கோரியுள்ளார்.

பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்:

குருநானக் பிரகாஷ் பூர் தினத்தில், உலக மக்களுக்கு எனது நல் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். பிராகாஷ் பூரப் தினத்தை ஒட்டி கர்தார்பூர் வழித்தடம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

எனது ஐம்பதாண்டு கால பொதுப்பணியில் நான் விவசாயிகளின் துயரத்தை உணர்ந்திருக்கிறேன். அதனால் தான் மக்கள் என்னை பிரதமராக்கியவுடன், விவசாயிகளின் நலனின் மீது மிகுந்த முக்கியத்துவம் வைத்தேன்.

விவசாயிகளுக்கு மண் ஆரோக்கிய அட்டைகள் வழங்கியுள்ளோம். இது விவசாய சாகுபடியை அதிகரிக்க உதவியுள்ளது. ஃபைசல் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீட்டுத் திட்டத்தால் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நிதியுதவி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

கிராமப்புற விவசாய சந்தை கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. 1000 மண்டிகள் இ மண்டிகளாக மாற்றப்பட்டுள்ளான. விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்காக நுண் பாசனத் திட்டத்துக்கான நிதி இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர பட்ஜெட், விவசாயிகளுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நிதி நிலைமை மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எங்களின் அரசாங்கம் விவசாயிகளின் நலனை நோக்கி செயல்படுகிறது. குறிப்பாக சிறு விவசாயிகளின் நலனின் மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.

விவசாயிகளின் நலனுக்காகவே மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால், ஒரு பகுதி விவசாயிகளின் ஒருபகுதியினர் இந்தச் சட்டத்தை எதிர்த்தனர். வேளாண் சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளிடம் விளக்கி எடுத்துச் செல்ல முயற்சித்தோம். போராடிய விவசாயிகளுடன் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினோம். சில திருத்தங்களைக் கூட மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினோம். விவசாயிகள் நீதிமன்றம் சென்றனர். மூன்று வேளாண் சட்டங்களுக்காக போராடிய விவசாயிகளிடம் ஆதரவைப் பெற முடியவில்லை. இந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும்.

இதனால், விவசாயிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு தத்தம் களப் பணிகளுக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

விவசாயிகள் போராட்டம் ஓராண்டை நெருங்கவிருந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

விவசாயிகள் எதிர்த்த மூன்று வேளாண் சட்டங்கள் என்னென்ன?

1. அத்தியாவசியப் பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டைத் தளர்த்தி சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசியப் பொருளாகக் கொள்ளப்படும்.

2. ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வசதி செய்து கொடுத்தல்

3. ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது.

இவை தான் விவசாயிகள் எதிர்த்த மூன்று வேளாண் சட்டங்களாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x