

நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் மக்கள் பிரதிநிதிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் கூறியதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
82-வது அனைத்து இந்திய தலைமை அதிகாரிகள் மாநாட்டில் நேற்று பிரதமர் மோடி காணொலியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் இந்தியாவின் உயரந்தமதிப்பான அம்சங்களை பின்பற்றி, தங்களின் நடத்தை, கடமை மூலம் மக்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும். நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மட்டும் நடத்த தனியாக நேரம் ஒதுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சுக் குறித்து கிண்டலாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.அவர் பதிவிட்ட கருத்தில் “ நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்த தனியாக நேரம் ஒதுக்க வேண்டும்,
ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என பிரதமர் பேசியது ரசிக்கும் விதத்தில் இருக்கிறது. நான் கேட்கும் கேள்வி என்பது, நாடாளுமன்ற விவாதங்களில் பிரதமர் மோடி அடிக்கடி பங்கேற்பாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் முக்கியமான விவாதங்களில் பங்கேற்காமல் மத்திய அரசு அச்சப்பட்டு புறக்கணிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது குறிப்பிடத்தக்கது.