

பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்ட முதல் நாளான இன்று 27.25 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நிறுவனத்தை
தொடங்கியவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான விஜய் சேகர் சர்மா, நமது எதிர்காலம் என்ன என்பதை ஒரு நாள் தீர்மானிக்காது என்று கூறியுள்ளார்.
டிஜிட்டல் நிதி சேவையில் முன்னணி நிறுவனமாக பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் 8-ம் தேதி அன்று பங்கு வெளியிட்டது.
பங்கு வெளியிடப்பட்டு நவம்பர் 10-ம் தேதி அன்று முடிவடைந்தது. இதன் பங்கு ஒதுக்கீடானது நவம்பர் 15, 2021 அன்று செய்யப்பட்டது. இன்று பங்கு சந்தையில் அதன் பங்குகள் பட்டியலிடப்பட்டன.
பேடிஎம் ஒரு பங்கின் மதிப்பு 2,080 ரூபாய் முதல் 2,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட இதன் விலை தொடக்கத்திலேயே சரிவை கண்டது.
மும்பை பங்குச்சந்தையில் 1955 ரூபாயாக தொடங்கியது. இது வெளியீட்டு விலையானது 2150 ரூபாயில் இருந்து 9.07 சதவீதம் அளவில் சரிவு காணப்பட்டது. பின்னர் மேலும் சரிந்து 1806.65 ரூபாயாக காணப்பட்டது.
இதேபோன்று தேசிய பங்குசந்தையில் இந்த பங்குகள் நிர்ணயவிலையை விடவும் 15.97 சதவீதம் சரிவினைக் கண்டது.
பேடிஎம் இன்று தனது முதல் வர்த்தக நாளிலேயே தனது மதிப்பில் 27 சதவீதத்துக்கும் அதிகமாக இழந்தது. இன்று பங்குச்சந்தை வர்த்தகம் முடிவடைந்த நிலையில் அதன் பங்குகள் 27.25 சதவீதம் சரிந்தன. ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தால் இதுவரை இல்லாத மோசமான பங்கு வெளியீடாக இது பார்க்கப்படுகிறது.
பங்குகள் பட்டியலிடப்படும் நிகழ்வில் நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா பங்குகள் அதிரடியாக சரிவு கண்டதால் கண்ணீர் விட்டார்.
பின்னர் இதுகுறித்து பேசிய பேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா கூறியதாவது:
பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே சரிவடைந்ததற்காக மன வருத்தம் இல்லை. இந்தியாவில் பட்டியலிடப்பட்டதற்கு வருத்தப்படவில்லை. நமது எதிர்காலம் என்ன என்பதை ஒரு நாள் தீர்மானிக்காது.
இது ஒரு புதிய வணிக மாதிரி ஆகும். ஒருவர் இதை நேரடியாக புரிந்து கொள்ள நிறைய காலம் எடுக்கும். சந்தைகளுக்கும் சந்தை பங்கேற்பாளர்களுக்கும் எங்கள் நிறுவனத்தை கொண்டு செல்ல காலம் நிறைய இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.