

சிபிஐ, அமலாக்கப்பிரிவு இயக்குநர்களின் பதவிக் காலத்தை 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு கொண்டு வந்தஇரு அவசரச்சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த சூழலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி. மஹூமா மொய்த்ரா, மூத்த வழக்கறிஞர் எம்எல் சர்மா ஆகியோர் இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குநர்களின் பதவிக்காலம் தற்போது 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதை 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்துள்ளது. மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் திருத்தச்சட்டம்(2021) என்ற பெயரில் மத்திய அரசு அவசரச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
இந்தச் சட்டத்திருத்தங்களால், அமலாக்கப்பிரிவு, சிபிஐ இயக்குநர்கள் மட்டுமல்லாமல், பாதுகாப்பு, உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர்களின் பதவிக்காலத்தையும் நீட்டித்துக்கொள்ள மத்திய அரசால் இயலும்.
கடந்த 2018ம் ஆண்டு அமலாகக்ப்பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்ட மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மிஸ்ராவின் பதவிக்காலம் இன்று முடியும் நிலையில் அவருக்கு ஓர்ஆண்டுக்கு நீட்டிப்புச் செய்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிபிஐ, அமலாகாகப்பிரிவு இயக்குநர்களுக்கு பதவிநீட்டிப்பு வழங்கி பிறப்பித்த அவசரச் சட்டம் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணானது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வரும்நிலையில் அந்த கட்சி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த ஊழல் தடுப்பு ஆணைய திருத்தச்சட்டம் 2021, டெல்லி சிறப்பு போலீஸ் உருவாக்க திருத்தச்சட்டம் 2021, ஆகிய இரு அவசரட்டங்களையும் எதிர்த்து ரன்தீப் சுர்ஜேவாலா முறையீடு செய்துள்ளார்.
சிபிஐ, அமலாக்கப்பிரிவு இயக்குநர்களுக்கு 2 ஆண்டுகள்தான் பதவிக்காலம் என்றநிலையான வரையறை இருக்கும்போது, இந்தச் சட்டத்திருத்தத்தால் அவர்கள் கூடுதலாக ஓர் ஆண்டு நீட்டிப்பு பெறுகிறார்கள் என்று சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்திருத்தம் பொதுநலன் சார்ந்தது என்பதற்கான எந்தவிதமான வரையறையும் இல்லை. அதுமட்டுமல்லாமல் விசாரணை அமைப்புகளின் சுதந்திரத்தின் மீது நேரடியாக கேள்வி கேட்கவும், தாக்கத்தை ஏற்படுத்துவதுபோல் இருக்கிறது, சுதந்திரமான செயல்பாட்டுக்கு நேரடியாக முரணாக இருக்கிறது. சிபிஐ, அமலாக்கப்பிரிவு இயக்குநர்களுக்கு பதவிக்காலம் நிலையாக 2 ஆண்டுகள் இருக்கும்போது, இப்போது ஒவ்வொரு ஆண்டும் பதவி நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
ஆதலால், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய உத்தரவுகளை மீறும் வகையிலும் சட்டத்திருத்தம் இருப்பதாலும், இதுபோன்ற விசாரணை அமைப்புகளின் சுயாட்சித்தன்மையை உறுதிப்படுத்தச் செய்வதும் அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.