

ஒரு சிறுமியை அவர் அணிந்திருக்கும் ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் சீண்டல் என்று கருத முடியாது, குற்றம் சாட்டப்பட்டவருக்கும், பாதிக்கப்பட்டவருக்கும் இடையே உடல்ரீதியான தொடர்பு இல்லாதவரை அது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படாது என்று மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த ஜனவரி மாதம் 12 வயதுச் சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர், அதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை கடந்த ஜனவரி 19-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அதில், “குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைகளைக் கழற்றாமல் அவரின் உடலைச் சீண்டியுள்ளார். எனவே இது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகாது. உடல்ரீதியான தொடர்பு இல்லாததால் போக்சோ சட்டத்தின் கீழ் வராது” எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ சட்டப் பிரிவையும் ரத்து செய்தது.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், தேசிய மகளிர் ஆணையம் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் இத்தீர்ப்புக்கு எதிராக முறையிட்டனர்.
மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், எதிர்காலத்தில் இது பல்வேறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கிலிருந்து குற்றவாளியை விடுவித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையின் தீர்ப்புக்கு உட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவிந்திர பாட், பேலா எம்.திரிவேதி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில், “ பாலியல் வன்கொடுமைகள் நடக்கக் காரணமாக இருப்பதே பாலியல் நோக்கம்தான். குழந்தையின் உடலோடு, உடல் உரசுவது அல்ல. சட்டத்தின் நோக்கம் என்பது குற்றவாளியை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச் செல்வதாக இருக்காது. ஆதலால், மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை வழங்கிய தீர்ப்பை ரத்து செய்கிறோம்.
சட்டப்பேரவைகள் தெளிவான நோக்கத்தை வெளிப்படுத்தியிருக்கும்போது, நீதிமன்றங்கள் அதில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. குழப்பத்தை உருவாக்குவதும் உரிமையாக இருக்க முடியாது. ஆதலால், விடுவிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர் அடுத்த 4 வாரங்ளுக்குள் சரணடைய வேண்டும். போக்சோ நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை, 5 ஆண்டு கடும் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.