Last Updated : 18 Nov, 2021 11:19 AM

 

Published : 18 Nov 2021 11:19 AM
Last Updated : 18 Nov 2021 11:19 AM

சபரிமலை அரவணப் பாயசம் குறித்து தவறான தகவல்; அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசு உறுதி

கோப்புப்படம்

கொச்சி

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணப் பாயசம், நிவேத்தியம், பிரசாதத்தில் ஹலால் சான்றளிக்கப்பட்ட சர்க்கரை பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சபரிமலை சிறப்பு ஆணையர் எம்.மனோஜ் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், அவ்வாறு ஹலால் சான்றளிக்கப்பட்ட சர்க்கரை, நிவேத்தியத்துக்குப் பயன்படுத்தப்படவில்லை. அவ்வாறு எழுந்த தகவல் பொய்யானது. இதுகுறித்துச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள அரசு எச்சரித்துள்ளது.

கொச்சியைச் சேர்ந்த எஸ்ஜேஆர் குமார் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “கேரளாவின் புகழ்பெற்ற, பாரம்பரியம் கொண்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசாதம், நிவேத்தியம் தயாரிக்க வேறு மதத்தினர் பின்பற்றப்படும் முறையில் ஹலால் சான்று வழங்கப்பட்ட சர்க்கரை பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அவ்வாறு பயன்படுத்துவது, இந்து மதத்தின் பாரம்பரியம், கோயிலின் மரபுகள், ஆகமங்கள் ஆகியவற்றுக்கு விரோதமானதாகும்.

அரவணப் பாயசம், உன்னி அப்பம் ஆகியவை சபரிமலை ஐயப்பனுக்கு மட்டும் படைக்கப்படும் நிவேத்தியம். அந்த நிவேத்தியம் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. நிவேத்தியம் தயார் செய்யப்படும்போது, சுத்தமான பொருட்களைக் கொண்டும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவது அவசியம்.

தெய்வத்தின் விருப்பத்தின்படி பிரசாதம், நிவேத்தியம் செய்யப்பட்டால் மட்டுமே பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் தெய்வத்தின் அருளுடன் இருக்கும். ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்கள் என்பது வேறு மதத்தினர் நம்பிக்கையின் அடிப்படையில் பயன்படுத்தப்படும் பொருட்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3-வது பிரிவின்படி, கோயில் நிர்வாகத்தின்படி, இந்தச் செயல்கள் முற்றிலும் விரோதமானவை, விதிமுறைகளை மீறியவை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், பிஜி.அஜித் குமார் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, கேரள அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் விளக்கம் அளிக்கவும், சபரிமலை சிறப்பு ஆணையர் எம்.மனோஜ் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது.

சட்ட நடவடிக்கை

ஆனால், இதுபோன்ற தவறான செய்திகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில், “அரவணப் பாயசத்தில் பயன்படுத்தப்படும் சர்க்கரை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. உண்மைக்கு மாறான தகவல்கள் அடங்கியுள்ளன. சில ஊடகங்களிலும், ஆன்லைன் தளங்களிலும் தவறான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபோன்ற தகவல்களைப் பரப்புவோர் மீது தேவஸ்தானம் தகவல் தொழில்நுட்பச் சட்டப்படி சட்ட நடவடிக்கை எடுக்கும், அவதூறு வழக்கு தொடரும். இது தொடர்பாக சபரிமலை நிர்வாக அதிகாரி சன்னிதானம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து, குறிப்பிட்ட இணையதளத்துக்கு எதிராகவும், சில ஊடகங்களுக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யக் கோரியுள்ளார்’’ எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x