

நடு வானில் சக பயணி ஒருவருக்கு சரியான நேரத்தில் மருத்துவராக சேவையாற்றிய மத்திய அமைச்சர் டாக்டர் பகவத் கரட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்துறை இணை அமைச்சராக இருப்பவர் டாக்டர் பகவத் கரட். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர், ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். அவுரங்காபாத்தில் மருத்துவமனை நடத்தி வரும் இவர்,பல்வேறு நிலைகளில் மருத்துவ சேவையாற்றியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு முன்பு அவுரங்காபாத் மேயராக பணியாற்றினார்.
இந்நிலையில், பகவத் கரட் நேற்று முன்தினம் இரவு இண்டிகோ விமானத்தில் டெல்லியில் இருந்துமும்பைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சக பயணி ஒருவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனே பகவத் கரட் ஒரு மருத்துவராக அவருக்கு தேவையான உதவிகளைச் செய்தார்.
விமானத்தில் ஒரு வரிசை இருக்கைகள் மீது படுத்திருக்கும் நோயாளியை அமைச்சர் அருகில் நின்று கவனிப்பது போன்ற புகைப்படங்களை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்து.
இதுகுறித்து அமைச்சர் பகவத்கரட் கூறும்போது, “அந்த நோயாளிக்கு அதிகமாக வியர்த்தது. மேலும் ரத்த அழுத்தம் குறைந்தது. குளுக்கோஸ் தரப்பட்ட பிறகு அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார்” என்றார்.
இது தொடர்பாக இண்டிகோ ஏர்லைன்ஸ் தனது ட்விட்டர் பதிவில், “இடைவிடாது தனது கடமையை செய்த மத்திய இணை அமைச்சருக்கு எங்களது மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவிக்கிறோம். சக பயணிஒருவருக்கு தாமாக முன்வந்து உதவிய டாக்டர் பகவத்தின் செயல்எங்களை மிகவும் ஊக்குவிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
இதனை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மறுபதிவு செய்து, “எனது சக ஊழியரான டாக்டர் பகவத் கரட், இதயத்தில் எப்போதும் ஒரு மருத்துவராக இருக்கிறார். அவரது செயல் பாராட்டுக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.