

நாட்டில் முதல் முறையாக மீன்வளத் தொழில் முனைவோருக்கானப் பயிற்சி நிலையம், ஹரியாணா மாநிலம் குருகிராமில் தொடங்கப் பட்டுள்ளது.
‘லினாக்-என்சிடிசி ஃபிஷ்ஷரிஸ் இன்குபேஷன் சென்டர் (எல்ஐஎப்ஐசி)’ எனும் பெயரிலான இந்தப் பயிற்சி நிலையத்தை மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா திறந்து வைத்தார். கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட பிரதமர் மீன் வளத் திட்டத்தின் (பிஎம்எம்எஸ்ஒய்) கீழ் ரூ.3.23 கோடி செலவில் இது அமைக்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் (என்சிடிசி) இதனை நிர்வகிக்கிறது.
விழாவில் மத்திய அமைச்சர் ரூபாலா பேசும்போது, “மீன் வளர்ப்பு முதல் அதன் விற்பனை வரை பயிற்சி, ஆலோசனை, தொழில் முதலீட்டுக் கடன் உள்ளிட்ட அனைத்தும் எல்ஐஎப்ஐசி சார்பில் வழங்கப்படும்” என்றார்.
நிகழ்ச்சிக்கு மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தலைமை வகித்தார். அவர் பேசும்போது, “மீன்வளத் துறை நம் நாட்டில் ஆண்டுக்கு 7 சதவீத வளர்ச்சி பெறுகிறது. நம் நாட்டின் மீன் உற்பத்தி தற்போது 130 லட்சம் டன்னாகவும் அதன் ஏற்றுமதி மதிப்பு ரூ.46,000 கோடியாகவும் உள்ளது. 2025-ம் ஆண்டில் மீன் உற்பத்தியை 22 மில்லியன் டன்களாகவும் ஏற்றுமதி மதிப்பை ரூ.1 லட்சம் கோடியாகவும் உயர்த்த பிரதமர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இதை நிறைவேற்றும் முயற்சியில் இப்பயிற்சி நிலையம் முக்கியப் பங்கு வகிக்கும்” என்றார். இதுகுறித்து என்சிடிசியின் தலைமை இயக்குநர் ஆர்.வனிதா, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, “ஆறு மாத காலத்துக்கான இந்தப் பயிற்சி, நாட்டின் அனைத்து மீனவர்கள் மற்றும் மீன் துறையை சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது உணவு, தங்குமிடம் இலவசம். இத்துடன் 10 ஆயிரம் ரூபாய் மாத உதவித்தொகையுடன் பயண தொகையும் அளிக்கப்படும். பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் அவர்களது மொழிகளில் வழிகாட்ட ஒருவர் பணியமர்த்தப்படுவார்” என்றார்.