என் அம்மாதான் எனக்கு பெரும் அகத்தூண்டுதல்: கண்ணய்யா

என் அம்மாதான் எனக்கு பெரும் அகத்தூண்டுதல்: கண்ணய்யா
Updated on
1 min read

ஜே.என்.யூ. மாணவர் தலைவர் கண்ணய்யா குமார் தனக்கு பெரிய அகத்தூண்டுதலாக இருந்து வருவது தன் தாயார்தான் என்று கூறியுள்ளார்.

28 வயது பி.எச்டி மாணவரான கண்ணய்யா குமார் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு நாடு முழுதும் பெரிய விவாதங்களைக் கிளப்பியது. தற்போது ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் பெற்றார். அவரது தாயார் பிஹாரின் பெகுசராய் மாவட்டத்தின் பியாத் கிராமத்தில் வசித்து வருகிறார்.

கண்ணயா குமார் அளித்த பேட்டியில், "என்னுடைய தாயார்தான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய அகத்தூண்டுதல், ஏனெனில் வாழ்க்கையில் நிறைய போராடியிருக்கிறார், இன்னமும் போராடியே வருகிறார். அவர் திருமணமான பிறகு தனது 12-ம் வகுப்புப் படிப்பை முடித்தார். என் அண்ணனை பெற்றெடுத்தார். வீடு, குழந்தைகள், படிப்பு என்று அனைத்தையும் நிர்வகித்தார். இப்போது அங்கன்வாடியில் அவருக்கு வேலை. சம்பளம் ரூ.3000 என்றாலும் இன்னமும் கடினமாக உழைத்து வருகிறார்.

நான் எனது பள்ளி நாட்களிலேயே பிரகாசமான மாணவன், இதனால்தான் எனது ஆசிரியர்கள் நான் தனியார் பள்ளியில் படிக்க வேண்டும் என்று என் தந்தையிடம் வலியுறுத்தினர். ஆனால் நாங்கள் வசதி படைத்தவர்கள் அல்ல, இதனால் எனது தந்தையினால் 3 ஆண்டுகளுக்கு மேல் செலவு செய்ய முடியவில்லை. 5, 6, 7-ம் வகுப்புகள் நீங்கலாக நான் முழுதும் அரசு கல்விநிலையங்களிலேயே படித்தேன்.

இந்தக் காரணத்தினால்தான் அறிவியல் படிப்பை நான் மேற்கொள்ள முடியாது என்பதை மிக முன்னதாகவே உணர்ந்து இலக்கியத்திற்குள் நுழைந்தேன். மக்சிம் கார்க்கி, முன்ஷி பிரேம்சந்த் உட்பட பல இலக்கியக் கர்த்தாக்களையும் வாசித்தேன். மார்க்சிய இலக்கியங்களில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு, அதுதான் என்னிடத்தில் அரசியல் செயல்பாட்டு விதைகளை விதைத்தது.

2009-ம் ஆண்டு நான் டெல்லி வந்து சிவில் சர்வீசஸ் தேர்வுகள் எழுத பயிற்சிக்காக ஒரு நிறுவனத்தில் சேர்ந்தேன். ஆனால் 2010-ம் ஆண்டு சிவில் சர்விசஸ் திறன் அறிதல் தேர்வின் முறை முற்றிலும் மாறின. என்னால் மீண்டும் கோச்சிங் நிலையத்தில் சேர முடியாமல் போனது. இந்த 3 ஆண்டுகாலத்திலும் கூட எனது குடும்பத்தின் நிதி நிலைமைகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. என் தாயார்தான் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர். இதனால் ஜே.என்.யூ.வில் சேர்ந்தேன்.

எனவே எனது வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய விஷயம் ஜே.என்.யூ. எனக்குக் கிடைத்ததுதான். இந்த பல்கலைக் கழகம் இல்லையெனில் பி.எச்டி-யை நான் நினைத்துக் கூட பார்க்க முடியாது” என்றார்.

2011-ம் ஆண்டு ஜே.என்.யூ. நுழைவுத் தேர்வில் கண்ணய்யா குமார் முதலிடம் பிடித்தார். தற்போது ஜே.என்.யூ. மற்றும் தன் நண்பர்களைத் தவிர தனக்கு வேறு எதுவும் முக்கியத்துவம் இல்லை என்கிறார்.

ஜே.என்.யூ. மாணவர் அமைப்பு தேர்தலின் போது கண்ணய்யா குமார் 10 நிமிடங்கள்தான் பேசியுள்ளார், இதுவே அவரின் புகழை உயர்த்தியது. 1,029 வாக்குகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in