Published : 17 Nov 2021 07:04 PM
Last Updated : 17 Nov 2021 07:04 PM

முதன்முறை சாதனை; 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை உயர்வு: மன்சுக் மாண்டவியா பெருமிதம்

புதுடெல்லி

நாட்டில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை, ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தகுதியுள்ள நபர்களை விட முதன் முறையாக அதிகரித்துள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி செலுத்தும் இயக்கம் இந்த குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது. இன்று காலை 7 மணி நிலவரப்படி நாட்டில் 113.68 கோடிக்கும் அதிகமான (1,13,68,79,685) பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 67,82,042 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த சாதனை 1,16,73,459 அமர்வுகள் மூலம் எட்டப்பட்டுள்ளது. இவற்றில் 75,57,24,081 டோஸ் தடுப்பூசிகள் முதல் தவணையாகவும், 38,11,55,604 டோஸ்கள் இரண்டாவது தவணையாகவும் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை (38,11,55,604) ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை விட (37,45,68,477) விட அதிகரித்துள்ளது.

இந்த சாதனைக்கான நாட்டின் கூட்டு முயற்சிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், “நாம் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போரில் ஒன்று சேர்ந்து வெற்றி பெறுவோம்.

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை, பாதி தடுப்பூசி போட்டவர்களை விட முதல் முறையாக அதிகரித்துள்ளது.

மாதம் முழுவதும் நடைபெறும் ஒவ்வொரு வீட்டிற்கும் தடுப்பூசி இயக்கத்தின் முடிவில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பார்கள். 2021 ஜனவரி 16-ந் தேதி தடுப்பூசி இயக்கம் தொடங்கியதிலிருந்து பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

2021 அக்டோபர் 21-ந் தேதி 100 கோடி டோஸ்களை இயக்கம் கடந்தது. அதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 3-ந் தேதி இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களை ஊக்குவித்து வீடு வீடாக சென்று அதனை செலுத்திக் கொள்ள அறிவுறுத்த அறைகூவல் விடுத்தார். அதன் மூலம் இந்த சாதனை நடந்துள்ளது.

இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளுமாறும் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினரையும், சமுதாயத்தினரையும் ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x