Published : 17 Nov 2021 06:06 PM
Last Updated : 17 Nov 2021 06:06 PM

உ.பி.தேர்தல்: 5 கோடி பெண் வாக்காளர்களைக் கவர 8 ஆயிரம் பெண்கள் பிரச்சாரம்: பிரியங்காவின் 100 நாள் அசத்தல் திட்டங்கள்

உ.பி.சட்டப்பேரவைத் தேர்தலில் 5 கோடி பெண் வாக்காளர்களைக் கவர 8 ஆயிரம் பெண்களைப் பிரச்சாரத்தில் களமிறக்குவதோடு மேலும் பல அசத்தல் திட்டங்களை பிரியங்கா செயல்படுத்த உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, மத்தியிலும் உ.பி.யிலும் ஆளும் பாஜக அரசு அடுத்தடுத்து பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறது. மேலும் பல வளர்ச்சித் திட்டங்களையும் அந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அண்மையில் உ.பி.யில் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

உ.பி. தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க வேண்டுமென்பதற்காக உத்தரப் பிரதேச மாநிலத்திற்காகவே காங்கிரஸ் கட்சியினரால் களமிறக்கப்பட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.

உ.பி.,யில் பெண்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் நிலையில் வரும் தேர்தலில் பெண்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி அதையே தீவிரப் பிரச்சாரமாக பிரியங்கா கையில் எடுத்துள்ளார்.

இதனால் ''பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்'' என்று ஏற்கெனவே கூறிவந்த பிரியங்கா காந்தி 40 சதவீத பெண் வேட்பாளர்கள் தேர்லில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என அறிவித்திருந்தது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

100 நாள் செயல்திட்டம்

அதைத் தொடர்ந்து தற்போது உ.பி.,யைச் சேர்ந்த 5 கோடி பெண் வாக்காளர்களைக் கவர என்ற முழக்கத்தோடு 100 நாள் செயல் திட்டத்தை பிரியங்கா காந்தி முன்னெடுத்துள்ளார். தற்போது மாநிலத்தில் சுமார் 7 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த சட்டசப்பேரவைத் தேர்தலில் 4 கோடி பெண்கள் வாக்களித்துள்ளனர். சுவாரஸ்யமாக, ஆண்களின் 59 சதவீதத்துடன் ஒப்பிடும்போது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 4 சதவீதம் அதிகமாக 63 சதவீதமாக உள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 1 சதவீதம் அதிகம். காங்கிரஸ் தேர்தல் வியூகவாதிகளின் கூற்றுப்படி, 60 சதவீத பெண் வாக்காளர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். இந்த 60 சதவீத இளம்பெண்கள் மீதுதான் காங்கிரஸ் கட்சி தனிக் கவனம் செலுத்திவருகிறது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று (புதன்கிழமை) மாலை உத்தரப் பிரதேசத்தில் பெண் வாக்காளர்களைக் கவருவதற்கான அடுத்த 100 நாள் செயல் திட்டத்தை தொடங்குகிறார். இதற்காக சித்ரகூடின் ராம் காட் பகுதிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அடுத்த 100 நாட்களில் நான்கு கோடி பெண் வாக்காளர்களைச் சென்றடையும் வகையில் காங்கிரஸ் பெரிய மக்கள் தொடர்பு பிரச்சாரத்தையும் தொடங்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

தினமும் 2 லட்சம் பெண்களை நோக்கிய பிரச்சாரம்

இதற்காக "மஹிலா ஹூன் லட் சக்தி ஹூன்" என்ற முழக்கத்தோடு சுமார் 8,000 பெண் தன்னார்வலர்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியாக 150 வல்லுநர்கள் இரவும்பகலாக பிரச்சாரக் குறிப்புகளை தயாரித்து வருகின்றனர்.

பிரியங்கா காந்தியின் வாக்குறுதிகளை இந்த படைப்பிரிவு தினமும் சுமார் 2 லட்சம் பெண்களுக்கு கொண்டுசேர்க்கும்.

பிரச்சாரத்திற்காக ஒரு கோடி இளஞ்சிவப்பு சிலிகான் பேண்டுகள் மற்றும் கவர்ச்சிகரமான ஸ்டிக்கர்களை காங்கிரஸ் தயார் செய்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், பணவீக்கம் ஆகியவையும் பிரச்சாரத்தின் போது எழுப்பப்படும்.

மாரத்தான் ஓட்டம்

பிரச்சாரத்தை பிரபலப்படுத்த, பெண்களுக்கான மாரத்தான் நடத்தும் திட்டமும் உள்ளது, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும். ஷாப்பிங் மால்கள் மற்றும் பெண்கள் கல்லூரிகளில் விளம்பர பிரச்சாரம் நடத்தப்படும். பெண் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் 5,000 மொபைல் யூனிட்கள் போன்ற 1,000 பெண் வல்லுநர்களைக் கொண்ட ஒரு செல்வாக்கு குழுவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

காங்கிரஸின் டிஜிட்டல் குழு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தினசரி அறிக்கைகளை மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். லக்னோவில் ஒரு கால் சென்டர் இயங்கி வருகிறது. கட்டுப்பாட்டு அறையிலிருந்து தரவு அழைப்பு கால்செண்டருக்கு அனுப்பப்படும். வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில் சமூக ஊடக பிரச்சாரங்கள் நடத்தப்படும்.

சித்ரகூட்டில் இன்று பிரியங்கா பிரச்சாரம்

உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளில் 100 தொகுதிகளில் காங்கிரஸ் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறது. 100 நாட்களில் இந்தப் பிரச்சாரம் முழுமூச்சாக நடத்தப்படும். இத்தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்க ஒவ்வொரு பெண் வாக்காளரையும் 10 முறை தொடர்புகொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரச்சாரம் தவிர, மாநிலம் முழுவதும் சிறப்பு உரையாடல் கூட்டங்கள் என்று 100 டவுன்ஹால்களை காங்கிரஸ் ஏற்பாடு செய்ய உள்ளது.

பிரியங்கா காந்தி வத்ரா இன்று நடைபெறும் சித்ரகூட் நகரத்தின் பிரமாண்ட அரங்கில் உரையாற்றுகிறார். இந்நிகழ்வைப் போன்று 10 நகர அரங்குகளில் உரையாற்றுவார்.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி சமூக ஊடகங்களை தேர்தல் பிரச்சார உத்தியாகப் பயன்படுத்தியதில்லை. ஆனால் இந்த முறை முற்றிலும் மாறுபட்டு டிஜிட்டல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கவனம் செலுத்தி வருகிறது.

கட்சியின் முக்கிய வாக்கு வங்கியாக தனி ஒரு சாதியை நம்பி காங்கிரஸ் இல்லை என்பதால் பெண்கள் மத்தியில் பிரியங்கா காந்தி வதேராவின் பிம்பத்தை சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் தேர்தல் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

வாக்குறுதியில் பெண்களுக்கு ஸ்மார்ட் போன்

பெண்களைக் குறிவைத்து, தங்கள் வாக்கு வங்கியின் எண்ணிக்கையை மேம்படுத்த முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது. இந்த நம்பிக்கையுடன், மாநிலத்தின் பாதி மக்களைக் (பெண்களை) கருத்தில் கொண்டு இந்த பெரிய அளவிலான பிரச்சாரத்தை கட்சி வடிவமைத்துள்ளது. பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் பெரிய வாக்குறுதிகளை அளித்துள்ளார், அதற்காக ஒரு தனி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களாவன: கல்லூரி செல்லும் பெண்களுக்கு ஸ்மார்ட்போன், இரு சக்கர வாகனம், இல்லத்தரசிகளுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசம், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதம் ரூ.10,000 கவுரவம், முதியோர்-விதவைகளுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் சில.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x