

நடுவானில் விமானத்தில் உயர் ரத்த அழுத்த நோயாளிக்கு முதலுதவி செய்த மத்திய இணை அமைச்சரின் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடியும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இண்டிகோ விமானத்தில் டெல்லியில் இருந்து மும்பைக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷண்ராவ் காரத் பயணித்துக் கொண்டிருந்தார். அடிப்படையில் இவர் ஒரு மருத்துவர்.
விமானம் கிளம்பிய ஒரு மணி நேரத்தில், திடீரென விமானத்தில் இருந்த ஒரு பயணிக்குத் தலைசுற்றல் ஏற்பட்டது. உயர் ரத்த அழுத்த நோயால் அவர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், விமானத்தில் யாரேனும் மருத்துவர்கள் உள்ளார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதைக் கேட்ட மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷண்ராவ் காரத், உடனடியாக எழுந்துவந்து நோயாளிக்கு முதலுதவி மேற்கொண்டார். முதலுதவிப் பெட்டியில் இருந்த ஊசியையும் நோயாளிக்குச் செலுத்தி, அவரின் உயிரைக் காப்பாற்றினார். இதைக் கண்ட சக பயணிகள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் பகவத்தின் செயலுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''மனதில் எப்போதும் நீங்கள் மருத்துவர்தான். என்னுடைய சக அமைச்சரின் செயலுக்குப் பாராட்டுகள்'' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.